வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
வரி செலுத்தாததால் வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது
அரியலூர்
அரியலூர் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் உள்ளன. நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் 100 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகளின் உரிமையாளர்கள் சிலர் வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். மேலும், சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில் வரி ஆகியவற்றை பலர் செலுத்தாததால் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்த வரியினங்களை செலுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை தகவல் கொடுத்தும், நேரில் சென்று கேட்டும் பலர் அதற்கான தொைகயை செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்தனர். இதனையடுத்து முதற்கட்டமாக அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் தொடங்கியது. அந்தவகையில், நகராட்சி பொறியாளர் தமயந்தி, மேலாளர்(பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் ஊழியர்கள் வரியினங்களை செலுத்தாத 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர். வருகிற 31-ந் தேதிக்குள் வரியினங்களை செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story