ஓமலூர் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் மாமூல் வசூலித்த 2 பேர் கைது
ஓமலூர் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் மாமூல் வசூலித்த 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஓமலூர்:-
போலீஸ் எனக்கூறி கடைகளில் மாமூல் வசூலித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஓமலூர் அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
போலீஸ் எனக்கூறி மாமூல் வசூல்
ஓமலூரை அடுத்த தும்பிபாடி ஊராட்சி சரக்கப்பிள்ளையூர் பகுதியில் உள்ள கடைகளில் போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி 2 பேர் மாமூல் வசூலித்து வந்துள்ளனர். நேற்று காலையிலும் அந்த 2 பேரும், கடைகளில் மாமூல் வசூலிக்க சென்றுள்ளனர். அப்போது வடிவேல் (வயது 54) என்பவர், போலீஸ் அதிகாரிகள் எனக்கூறிய நபர்களிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் வடிவேலுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் தீவட்டிப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.
2 பேர் கைது
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சின்னப்பம்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த குமார் (47). சாமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மணி (60) என்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரும் போலீசார் போன்று டிப்-டாப்பாக ஆடை அணிந்து இருந்தனர். மேலும் போலீசாரை போன்று தங்களது முடியை திருத்தி இருந்தனர். 2 பேரையும் பார்க்கும் போது போலீஸ் அதிகாரிகள் போன்று காட்சி அளித்தனர். இதில் மணி, எல்லை பாதுகாப்பு படை அலுவலகத்தில் பணியாளராக இருந்து ஓய்வு பெற்றவர் என கூறப்படுகிறது.
2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள், வேறு எங்காவது இதுபோன்று கைவரிசை காட்டியுள்ளனரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மாமூல் வசூல் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story