கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் இந்து கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்ய தடை; கோவில் நிர்வாகங்களின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு


கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் இந்து கோவில்களில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்ய தடை; கோவில் நிர்வாகங்களின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
x
தினத்தந்தி 24 March 2022 2:27 AM IST (Updated: 24 March 2022 2:27 AM IST)
t-max-icont-min-icon

தட்சிண கன்னடா உள்பட 4 மாவட்டங்களில் உள்ள இந்து கோவில்களில் திருவிழாவின்போது முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது எனக்கூறி அறிவிப்பு வெளியிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகங்களின் இந்த திடீர் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மங்களூரு: தட்சிண கன்னடா உள்பட 4 மாவட்டங்களில் உள்ள இந்து கோவில்களில் திருவிழாவின்போது முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது எனக்கூறி அறிவிப்பு வெளியிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகங்களின் இந்த திடீர் அறிவிப்பால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவில்கள் முன்பு அறிவிப்பு பேனர்

தட்சிண கன்னடா, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள இந்து கோவில்களில் திருவிழாக்களின்போது முஸ்லிம் மதத்தினர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகங்கள் சார்பில் கோவில்கள் முன்பு அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டு இருக்கிறது.

தட்சிண கன்னடா மாவட்டத்தில் புத்தூரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவில், மங்களூரு அருகே பாப்பாநாடு துர்கா பரமேஸ்வரி கோவில், கட்டீல் பரமேஸ்வரி கோவில், மங்களாதேவி கோவில், உடுப்பி மாவட்டம் காபு பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்கள் முன்பு இதுபோல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சிவமொக்கா மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களிலும் இந்து கோவில்களில் நடைபெறும் திருவிழாவின்போது முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைக்க தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அந்தந்த கோவில் நிர்வாகங்கள் எடுத்த முடிவு என்று கூறப்படுகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரல்

இதுபற்றி அறிந்த முஸ்லிம் வியாபாரிகள் யாரும் கோவில்கள் முன்பு கடைகள் அமைக்க செல்லவில்லை. இந்த நிலையில் இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த விவகாரம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து அவர் நேற்று இதுபற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒருசில இந்து கோவில்களில் திருவிழாவின்போது முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்யக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் இதுபற்றி யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் இதுபற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு அவர் கூறினார். 

300 முஸ்லிம் வியாபாரிகள்...

இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து உடுப்பி மாவட்ட தெருவோர வியாபாரிகள் மற்றும் வணிகர்கள் சங்கத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் இந்து கோவில்களில் திருவிழாவின்போது முஸ்லிம் வியாபாரிகளும் கடைகள் அமைக்க அனுமதி கோரி கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி உடுப்பி மாவட்ட வியாபாரிகள் சங்க செயலாளர் முகமது ஆரிப் உடுப்பியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காபு, படுபித்ரி பகுதியில் உள்ள இந்து கோவில்கள் முன்பு முஸ்லிம் வியாபாரிகள் கடைகள் அமைக்க கூடாது என்று பேனர் வைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற நடவடிக்கையால் இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 300 முஸ்லிம் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள்தான் வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம். வியாபாரிகள் அனைவரும், இந்து - முஸ்லிம் என்ற பேதத்தை மறந்து சகோதரர்கள் போன்று ஒற்றுமையாக இருக்கிறோம். அதனால் கோவில்கள் முன்பு முஸ்லிம் வியாபாரிகளும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய கோவில் நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

இந்து அமைப்பினர் மனு

இந்த நிலையில் சிக்கமகளூரு மற்றும் சிவமொக்கா மாவட்டங்களில் இந்து அமைப்பினர், முஸ்லிம் வியாபாரிகள் இந்து கோவில்கள் முன்பு கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகங்களிடம் மனு கொடுத்துள்ளனர்.

Next Story