மதுரை சிறை காவலர்கள் 2 பேர் பணி நீக்கம்


மதுரை சிறை காவலர்கள் 2 பேர் பணி நீக்கம்
x
தினத்தந்தி 24 March 2022 2:29 AM IST (Updated: 24 March 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் வழங்கிய விவகாரத்தில் மதுரை மத்திய சிறை காவலர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

மதுரை
கைதிகளுக்கு கஞ்சா, செல்போன் வழங்கிய விவகாரத்தில் மதுரை மத்திய சிறை காவலர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
கைதிகளுக்கு செல்போன்-கஞ்சா
மதுரை மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த கைதிகளுக்கு செல்போன்கள் மற்றும் போதை பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. 
அதை தொடர்ந்து கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சிறை முழுவதும் அதிகாரிகள் மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.  கைதிகள் அறைகளில் இருந்து செல்போன்கள், சிகரெட், கஞ்சா, புகையிலை பொருட்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
அது குறித்து கைதிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், சிறை காவலர்கள் விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகியோர் கைதிகளுக்கு செல்போன் வழங்கி வெளியாட்களிடம் பேச வைத்ததும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்ததும் தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் சிறை நிர்வாகம் பணியிடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்திருந்தது.
பணி நீக்கம்
பின்னர் சிறை நிர்வாகத்தின் சார்பில் குழு அமைத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் மற்றும் கைதிகளிடம் விசாரணை நடத்தினர். அதில் கைதிகளுக்கு அவர்கள் 2 பேரும், 5 மாதங்களாக செல்போன்களை சட்டவிரோதமாக வழங்கி 113 முறை பேச வைத்துள்ளதும், போதை பொருட்களை கைதிகளுக்கு வழங்கி, அதன் மூலம் காவலர்கள் 2 பேரும் பலன் அடைந்ததும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் மதுரை சிறை நிர்வாகம் சிறைக்காவலர்களான விஷ்ணுகுமார், செந்தில்குமார் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் மதுரை சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story