‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி
ராசிபுரத்தில் இருந்து நாமகிரிப்பேட்டை, அரியா கவுண்டம்பட்டி, பச்சுடையாம்பாளையம், கல்குறிச்சி, வழியாக பேளுக்குறிச்சிக்கு தனியார் பஸ் தினமும் 4 முறை இயக்கப்பட்டு வந்தது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ெதாழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தி வந்தனர். சமீபகாலமாக அந்த தனியார் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் கடும் அவதிக்கு ஆளாயினர். பஸ் நிறுத்தப்பட்டதால் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த வழித்தடத்தில் நிறுத்தப்பட்ட தனியார் பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்த பகுதியில் அரசு பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், நாமகிரிப்பேட்டை
---
பூட்டியே கிடக்கும் கழிப்பறை
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி புதிய பஸ்நிலையத்தில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கென தனித்தனியே கழிப்பறை உள்ளது. இந்த கழிப்பறை கடந்த சில மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் ஆண்கள் வளாகத்தை ஒட்டியுள்ள திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் பெண்கள் கழிப்பிட வசதி இன்றி சிரமப்படுகின்றனர். பயணிகள் சிரமத்தை போக்க பாப்பாரப்பட்டி பஸ் நிலையத்தில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
-கேசவன், பாப்பாரப்பட்டி, தர்மபுரி.
==
பகுதி நேர ரேஷன் கடை
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் பூலாவரி அக்ரஹாரம் புஞ்சை காடு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும்.
-சரவணன், புஞ்சை காடு, சேலம்.
==
நோய் பரவும் அபாயம்
சேலம் மாநகராட்சி 33-வது வார்டு தம்பி காளியம்மன் கோவில் 3-வது தெரு, பொன்னம்மாபேட்டை கேட் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் பல ஆண்டுகளாக கிடக்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் சேரும் குப்பைகளை தினமும் அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-ரத்தினம் விஷ்வா, 33-வது வார்டு, சேலம்.
===
பூங்கா பராமரிக்கப்படுமா?
சேலம் கொண்டலாம்பட்டி மண்டலம் மணியனூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பசுமை வெளி பூங்கா உள்ளது. இந்த பூங்கா அந்த பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு, நடைபயிற்சி செய்ய பயன்பட்டது. தற்போது பூங்கா பராமரிப்பு இல்லாமல் புல் மற்றும் பூச்செடிகளுக்கு தண்ணீர் விடாமல் காய்ந்த நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால் அந்த பகுதியில் புதர்கள் மண்டி காடாக மாறிவிடும். எனவே பூங்காவை பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.யோகநாதன், மணியனூர், சேலம்.
Related Tags :
Next Story