மனநலம் பாதித்து ஸ்டியரிங்குடன் வலம் வரும் பஸ் கண்டக்டர்
சிக்பள்ளாப்பூர் அருகே விபத்தில் சிக்கிய பஸ் கண்டக்டர் மனநலம் பாதித்து ஸ்டியரிங்குடன் வலம் வரும் உருக்கமான சம்பவம் நடந்து வருகிறது
சிக்பள்ளாப்பூர்: சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுனை சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 26). இவர் ஒரு தனியார் பஸ்சில் கிளீனராக வேலை செய்தார். அந்த பஸ்சின் டிரைவராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதற்காக அவர் ஓட்டுநர் பயிற்சி வகுப்புக்கும் சென்று வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது வாழ்க்கையே தடம்புரண்டுவிட்டது.
விபத்தில் சிக்கி தலையில் பலத்த அடிபட்டதால் மஞ்சுநாத் மனநலம் பாதிக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட போதிலும் டிரைவராக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவரது ஆழ்மனதில் பதிந்து போனது. இதனால் தினமும் காலை காக்கி சட்டை அணிந்து கொண்டு சிந்தாமணி பஸ் நிலையம் வரும் மஞ்சுநாத் தனது கையில் ஒரு ஸ்டியரிங், ஒரு கண்ணாடி எடுத்து கொண்டு நடைபயணமாக புறப்படுகிறார். அவர் தான் பஸ் ஓட்டுவதாக நினைத்து கொண்டு ஒவ்வொரு பஸ் நிறுத்தமாக நின்று பயணிகளை கூப்பிடுவது போல ஏறுங்கள்... ஏறுங்கள்... வேகமாக ஏறுங்கள்... என்று கூறுகிறார். பின்னர் கையை வைத்தே கியர் போட்டு கொண்டு அவர் தொடர்ந்து பஸ் ஓட்டுவது போல் தான் கையில் வைத்துள்ள ஸ்டியரிங்கை அங்குமிங்கும் திருப்பியபடி நடந்தே செல்கிறார்.
இறுதியில் ஒரு இடத்திற்கு சென்று சிக்பள்ளாப்பூர் வந்து விட்டது இறங்குங்கள்... இறங்குங்கள்... என்றும் கூறுகிறார். மறுபடியும் அவர் நடந்தே சிந்தாமணிக்கு வருகிறார். விபத்தில் சிக்கி மனநலம் பாதித் மஞ்சுநாத்தின் இந்த நிலையை பார்ப்பவர்களின் கண்களை குளமாக்குகின்றன. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story