கர்நாடகத்தில் சமையல் கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு


கர்நாடகத்தில் சமையல் கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 24 March 2022 3:23 AM IST (Updated: 24 March 2022 3:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் சமையல் கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்

பெங்களூரு: கர்நாடகத்தில் சமையல் கியாஸ், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கையில் இருந்து காசு...

கர்நாடகத்தில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து உள்ளது. அதுபோல் சமையல் கியாஸ் விலையும் ரூ.50 அதிகரித்து உள்ளது. நேற்று பெங்களூருவில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.102.28-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.86.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

வினோத் ராஜ் என்ற தனியார் நிறுவன ஊழியர் கூறுகையில், ‘நான் அலுவலக பணிக்காக தினமும் எனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று வருகிறேன். எங்கள் நிறுவனத்தில் மாத பெட்ரோல் அலவன்சு நிர்ணயித்து உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட பணத்தை தாண்டி மோட்டார் சைக்கிள் ஓட்டினாலும் தருவது இல்லை.
இதனால் எனது கையில் இருந்து காசு செலவழித்து தான் பெட்ரோல் போட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறேன். போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால் பெட்ரோல் வீணாக செலவாகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருப்பது வருத்தம்’ அளிக்கிறது என்றார்.

வெளியே செல்வதை தவிர்த்து...

டிரைவரான தங்கசெல்வம் என்பவர் கூறும்போது, நான் வாடகை கார் ஓட்டி வருகிறேன். ஒரு லிட்டர் டீசல் போட்டால் நெரிசல் இல்லாத சாலைகளில் 17 கிலோ மீட்டர் வரை காரை ஓட்ட முடியும். ஆனால் நகருக்குள் கார் ஓட்டும் போது ஒரு லிட்டருக்கு 13 முதல் 14 கிலோ மீட்டர் தான் ஓட்ட முடிகிறது. எங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் உரிமையாளர்கள் திணறுகிறார்கள். இப்படி ஒரு சூழ்நிலையில் டீசல் விலையை உயர்த்தி எங்களை போன்ற டிரைவர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி உள்ளனர்’ என்றார்.

கல்லூரி மாணவரான சந்தோஷ் கூறுகையில், ‘நான் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை வைத்து உள்ளேன். கல்லூரிக்கு அந்த மோட்டார் சைக்கிளில் சென்று வருகிறேன். ஆனால் பெட்ரோல் விலை உயர்வை பார்த்தால் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுக்கவே பயமாக உள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வெளியே செல்ல முடிவது இல்லை’ என்றார்.

கிரண் என்ற கல்லூரி மாணவர் கூறும்போது, ‘நான் முன்பு அடிக்கடி எனது நண்பர்களுடன் நந்திமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வருவேன். முன்பு ரூ.300-க்கு பெட்ரோல் போட்டால் நந்திமலைக்கு சென்று திரும்பிவிடலாம். தற்போது பெட்ரோலுக்கு ரூ.600 வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. பெட்ரோல் விலை உயர்வால் நண்பர்களுடன் வெளியே செல்வதை தவிர்த்து விட்டேன். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.60 ஆக குறைக்க வேண்டும்’ என்றார்.

நடுத்தர குடும்பத்தினர் நிலை

சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து பெண்கள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
ஆனந்தி என்ற மூதாட்டி கூறும்போது, ‘சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை பார்த்தால் மீண்டும் விறகு அடுப்பு பயன்பாட்டிற்கே சென்று விடலாம் என்று தோன்றுகிறது. கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி கொண்டே சென்றால் எங்களை போன்ற நடுத்தர குடும்பத்தினர் நிலை என்ன ஆகும் என்பதை விலையை உயர்த்துபவர்கள் யோசித்து பார்க்க வேண்டும்’ என்றார்.
இல்லத்தரசியான சங்கீதா என்பவர் கூறுகையில், ‘எங்கள் வீட்டில் 6 பேர் இருக்கிறோம். தினமும் அவர்களுக்கு 3 நேரமும் சமையல் செய்ய வேண்டி உள்ளது. டீ, காபி போட வேண்டி உள்ளது. தற்போது சமையல் கியாஸ் விலை கூடி உள்ளது. அன்றாட செலவுகளுடன் சமையல் கியாஸ் விலையும் கூடுவது என்னை சிரமத்திற்கு ஆளாக்கி உள்ளது’ என்றார்.

விலை அதிகரிக்க கூடாது

மஞ்சுஸ்ரீ என்ற இல்லத்தரசி கூறுகையில், ‘சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.700-க்கு தான் வாங்கி வந்தோம். ஆனால் தற்போது சிலிண்டர் விலை ஆயிரத்தை நெருங்கி விட்டது. நான் கைக்குழந்தை வைத்து உள்ளேன். அந்த குழந்தைக்கு பால், வெந்நீர் சூடு செய்ய அடிக்கடி கியாஸ் அடுப்பை பயன்படுத்துகிறேன். எனது குடும்பத்தினருக்கும் சமையல் செய்கிறேன். இதனால் மாதம் ஒரு சிலிண்டர் தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சிலிண்டர் விலையை குறைக்காவிட்டாலும் சரி. அதிகரிக்காமல் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
ஆசிரியையான கவுரம்மா கூறும்போது, ‘ரூ.915-க்கும் விற்கப்பட்ட சமையல் சிலிண்டர் ரூ.965 ஆக உயர்ந்து உள்ளது. மாடி வீடுகளுக்கு சிலிண்டரை தூக்கி செல்லும் கியாஸ் நிறுவன ஊழியர்களுக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் ஒரு சிலிண்டரை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். அத்தியாவசிய பொருட்கள் விலையை இப்படி உயர்த்தி செல்வது சரியல்ல’ என்றார்.

Next Story