2022- 23-ம் நிதி ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் ரூ.14 ஆயிரத்து 414 கோடி கடன் வழங்க இலக்கு- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 414 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் நிதி ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 414 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஆய்வுக்குழு கூட்டம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, 2022- 23-ம் ஆண்டிற்கான வருடாந்திர கடன் திட்ட மலரினை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வேளாண்மை துறை, மீன்வளத்துறை, கைத்தறித் துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாயிகள், இளைஞர்கள், தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.14,414 கோடி கடன்
அதன்படி 2022- 23-ம் ஆண்டிற்கு ரூ.14 ஆயிரத்து 414 கோடியே 19 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கடன்களை, தொடர்புடைய வங்கிகள் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். அப்போது தான் அரசுத்துறைகள் மீதும், வங்கிகள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். விண்ணப்பித்து நிலுவையிலுள்ள கடன் விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடன்களை வழங்கிடவும், குறிப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்ற பயிர்கடன் மற்றும் சிறுகுறுதொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படுகின்ற கடன்கள் வழங்குவதில் எந்தவித புகார்களுக்கும் இடம் அளிக்காமலும், முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கிட வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில் மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் ஜெட்லிலீமா அமலினி, மாவட்டத் தொழில்மைய மேலாளர் திருமுருகன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story