அந்தியூர் அருகே செல்லியம்மன் கோவில் குண்டம் விழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்


அந்தியூர் அருகே செல்லியம்மன் கோவில் குண்டம் விழா- ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்
x
தினத்தந்தி 24 March 2022 4:06 AM IST (Updated: 24 March 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே செல்லியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.

அந்தியூர்
அந்தியூர் அருகே செல்லியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
தீ மிதித்தனர்
அந்தியூர் அருகே புதுக்காடு விளாங்குட்டை கிராமத்தில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றதும் பழமையானதாகும். இந்த கோவில் குண்டம் திருவிழா கடந்த 9-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து செல்லியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு வேப்பிலை, மஞ்சள் பூசி பெண்கள் புனிதநீர் ஊற்றி வந்தனர். ஆண்கள் மாலை நேரங்களில் கம்பத்தை சுற்றி ஆட்டம் ஆடி வந்தனர்.
நேற்று முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி 40 அடி நீளத்துக்கு குண்டம் தயார் செய்தனர். பின்னர் பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து முதலில் பூசாரி குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து பக்தர்கள் தீ மிதிக்க தொடங்கினர்.
மஞ்சள் நீராட்டு விழா
வெள்ளை மற்றும் மஞ்சள் நிற ஆடையுடன், கையில் பூ சுற்றிய பிரம்பை வைத்துக்கொண்டு ஆண்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என ஏராளமான பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கினர். ஒரு சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். அப்போது “அம்மா, தாயே” என பக்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபட்டனர். இன்று (வியாழக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. திருவிழாவில் அந்தியூர், புதுக்காடு, விளாங்குட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story