அந்தியூர் அருகே பரபரப்பு: சாக்கடையில் வேன் டிரைவர் பிணம்; சாவில் சந்தேகம் என தந்தை புகார்- பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


அந்தியூர் அருகே பரபரப்பு: சாக்கடையில் வேன் டிரைவர் பிணம்; சாவில் சந்தேகம் என தந்தை புகார்- பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 24 March 2022 4:06 AM IST (Updated: 24 March 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே சாக்கடையில் வேன் டிரைவர் பிணமாக கிடந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெருந்துறை
அந்தியூர் அருகே சாக்கடையில் வேன் டிரைவர் பிணமாக கிடந்தார்.  அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக்கூறி பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
சாக்கடையில் பிணம்
ஈரோடு மாவட்டம் கோபி வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 38). வேன் டிரைவர். இந்தநிலையில் சதீஷ் நேற்று முன்தினம் காலை, தவுட்டுப்பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோட்டோர சாக்கடை கால்வாய்க்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து அந்தியூர் போலீசார்,  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முற்றுகை
இதற்கிடையில் சதீசின் உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு், சதீசின் சாவில் மர்மம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். எனவே விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதனால் அந்தியூர் போலீசார் உடனே சதீசின் உடலை அங்கிருந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்்து சதீசின் உறவினர்கள் நேற்று காலை பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத பரிசோதனைகூடம் முன்பு திரண்டனர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரேத பரிசோதனை
இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போலீசார், ‘சதீசின் மரணம் குறித்து தனியாக வழக்குப்பதிவு செய்யப்படும். மேலும் பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகு அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். இதை சதீசின் உறவினர்கள் ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சதீசின் உடல் மதியம் 2 மணிக்கு மேல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து  உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சதீசின் தந்தை கிருஷ்ணமூர்த்தி அந்தியூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், எனது மகன் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே போலீசார் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெருந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது. 

Next Story