ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழா- திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 March 2022 4:06 AM IST (Updated: 24 March 2022 4:06 AM IST)
t-max-icont-min-icon

ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். 
மாரியம்மன் கோவில் விழா
ஊஞ்சலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோவிலில் கம்பம் நடப்பட்டது. 
பின்னர் அன்றில் இருந்து தினமும் ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி ஈர உடையுடன் குடத்தில் புனிதநீர் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி அம்மனை வழிபட்டு வந்தனர். 
அன்னதானம்
கடந்த 14-ந் தேதி கொடியேற்றம், கிராம சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து தினமும் சாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. நேற்று பெண் பக்தர்கள் அனைவரும் வீடுகளில் இருந்து தட்டுகளில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தீ மிதித்து நேர்த்திக்கடன்
இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடினர். பின்னர் அங்கிருந்து பக்தர்கள் ஈர உடையுடன் கரகம் எடுக்கும் முறைதாரர் முன் செல்ல, அவர்களுடன் கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி கோவில் முன்புறம் 60 அடி நீளம் கொண்ட குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. கோவிலை சென்றடைந்ததும் குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 
இதையடுத்து குண்டத்தில் கரகம் எடுக்கும் முறைதாரர் முதலில் இறங்கி தீ மிதிக்க, தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று (வியாழக்கிழமை) மாலை தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Next Story