பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதியிடம் கைதிகள் வாக்குவாதம்
பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதியிடம் கைதி பிலால் மாலிக் வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகிறது.
டாக்டர் அரவிந்த் ரெட்டி, வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த வழக்குகளில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி இளவழகன் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர்.
இதையடுத்து, 3 பேரிடமும் நீதிபதி இளவழகன் விசாரணை நடத்தினார். அப்போது வழக்கை நடத்த வக்கீலை நீங்கள் நியமிக்காவிட்டால், நீதிமன்றமே, இலவச சட்ட முகமையிலிருந்து வக்கீலை நியமித்து அடுத்த வாய்தாவில் சாட்சிகளை விசாரிக்க தொடங்கி விடுவோம்’ என்று நீதிபதி கூறியதாக தெரிகிறது.
அதற்கு பிலால் மாலிக், எங்கள் விருப்பமில்லாமல், நீங்களே வக்கீலை நியமித்துக்கொள்ளலாமா? அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது. மேலும், இந்த வழக்கை நாங்கள் நடத்த மாட்டோம். நீங்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். தூக்கில் போடுவீர்கள், இல்லையென்றால் சுட்டு கொலை செய்வீர்கள், வேறு என்ன செய்ய முடியும் என நீதிபதியிடம் வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகிறது.
இதனால் சிறப்பு கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் பக்ருதீன் உள்ளிட்ட 3 பேரும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Related Tags :
Next Story