போதை தரும் மாத்திரைகள் விற்றால் மருந்து கடைக்கு ‘சீல்’


போதை தரும் மாத்திரைகள் விற்றால் மருந்து கடைக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 24 March 2022 4:55 PM IST (Updated: 24 March 2022 4:55 PM IST)
t-max-icont-min-icon

மருந்து கடைகளில் போதை தரும் மாத்திரைகள் விற்றால் கடைக்கு நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை

மருந்து கடைகளில் போதை தரும் மாத்திரைகள் விற்றால் கடைக்கு நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை காந்திசிலை அருகே உள்ள கண்ணா ஓட்டலில் மருத்து கடை உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட காவல் துறை சார்பில் நடைபெற்றது. 

துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, மருந்தக துறை ஆய்வாளர் கோகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்து கடை உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் வரவேற்றார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 
திருவண்ணாமலை மாவட்டத்தில் போதை பொருள் மற்றும் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 2 தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. 

இருப்பினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணியில் போதை மாத்திரைகள் பயன்படுத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

மருந்து கடைகளில் இருந்து சில்லரை விற்பனைக்காக மாத்திரைகளை மளிகை கடைகள் மற்றும் பங்க் கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.

கடுமையான நடவடிக்கை

போதை தரும் மாத்திரைகளை இளைஞர்கள் கேட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மருந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை போலீசாரிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க செய்ய வேண்டும். 

அப்போது தான் அவர் போதை மாத்திரைக்கு அடிமையானவரா அல்லது மாத்திரைகள் வாங்கி மற்றவர்களுக்கு சப்ளை செய்பவரா என்பது கண்டறிய முடியும். இதன் மூலம் மாத்திரைக்கு அடிமையானவராக இருந்தால் திருத்த நடவடிக்கை எடுக்கலாம் அல்லது விற்பனை செய்பவராக இருந்தால் கைது செய்யலாம். 

மருந்து கடைகளில் போதை தரும் மாத்திரை, மருந்துகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்கு நிரந்தரமாக ‘சீல்’ வைக்கப்படும். 

போலீசாரால் மட்டுமே 100 சதவீதம் போதை பொருட்களை ஒழிக்க முடியாது. உங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. எனவே மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு காவல் துறை மேற்கொண்டு வரும் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

கூட்டத்தில் பங்கேற்ற மருந்து கடை உரிமையாளர்கள் பார்வைக்காக போதை தரும் மாத்திரைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மருந்து கடை உரிமையாளர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story