முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் விஷம் குடித்த பெண் சாவு
நில பத்திரத்தை திருப்பி தராததால் விரக்தி அடைந்து முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி
நில பத்திரத்தை திருப்பி தராததால் விரக்தி அடைந்து முன்னாள் ஊராட்சி தலைவர் வீட்டில் தம்பதி விஷம் குடித்தனர். இதில் மனைவி பரிதாபமாக இறந்தார். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நில பத்திரம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சீலக்காம்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 60). விவசாயி. இவரது மனைவி சுமதி (45). இவர்களுக்கு கிருத்திக், தினகர் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கனகராஜூக்கு அதே பகுதியில் 18 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதற்கிடையில் அந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு கனகராஜ் முடிவு செய்தார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் தம்பு என்கிற நந்தகோபால் என்பவரிடம் ஒரு ஏக்கர் ரூ.18 லட்சத்து 50 ஆயிரத்து விலை பேசி முடித்ததாக தெரிகிறது.
இதற்கிடையில் நிலத்தை கிரையம் செய்வதற்கு சொத்தின் மீது ஏதாவது வில்லங்கம் இருக்கிறதா? என்று வக்கீலிடம் ஆலோசனை பெறுவதற்கு சொத்தின் அசல் பத்திரங்களை நந்தகோபால் பெற்றதாக தெரிகிறது. ஆனால் அதன்பிறகு சில நாட்கள் கழித்து கிரயத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று கூறி முன் பணமாக ரூ.5 லட்சத்தை கனகராஜிடம் கொடுத்தார். மேலும் அசல் பத்திரங்களை கொடுக்காமல் கிரயம் செய்ய வருமாறு கனகராஜை நந்தகோபால் வற்புறுத்தியதாக தெரிகிறது.
மனைவி சாவு
இதற்கிடையில் கனகராஜ் நில பத்திரங்களை திருப்பி தருமாறு கேட்டும், நந்தகோபால் கொடுக்காமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. மேலும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் கனகராஜ், சுமதி ஆகியோர் நந்தகோபாலின் வீட்டிற்கு சென்று பத்திரத்தை கேட்டனர். அப்போது நந்தகோபால் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த சுமதி அங்கேயே பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். இதை அவரது கனகராஜூம், அவரது மகனும் தடுக்க சென்றனர்.
இதற்கிடையில் திடீரென்று கனகராஜூம் அந்த மருந்து பாட்டிலில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரிகிறது. பின்னர் 2 பேரையும் மீட்டு கோலார்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு சுமதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். கனகராஜூக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர்கள் சாலை மறியல்
இந்தநிலையில் தற்கொலைக்கு துண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி முன் உறவினர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி நகர கிழக்கு போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. இந்த மறியல் போராட்டம் காரணமாக உடுமலை ரோட்டில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதற்கிடையில் துணை சூப்பிரண்டு தமிழ்மணி விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும் மிரட்டல் விடுப்பதால் உரிய பாதுகாப்பு வழங்கவும், அசல் நில பத்திரத்தை திரும்ப வாங்கி கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து துணை சூப்பிரண்டு கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு ஆஸ்பத்திரி என்பதால் நோயாளிகள் உள்பட பலரும் பாதிக்கப்பட கூடும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story