திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் திட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் திட்டம்
x
தினத்தந்தி 24 March 2022 8:13 PM IST (Updated: 24 March 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரங்கள் வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இலவச தையல் எந்திரங்கள்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2021-2022-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் எந்திரம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்ட தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வருமான வரம்பு

தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சமாக இருக்க வேண்டும். வயது வரம்பு 20 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒரு முறை தையல் எந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையின பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story