தூத்துக்குடியில் ஒரே நாளில் பயங்கரம்: பெண் உள்பட 2 பேர் படுகொலை


தூத்துக்குடியில் ஒரே நாளில் பயங்கரம்: பெண் உள்பட 2 பேர் படுகொலை
x
தினத்தந்தி 24 March 2022 8:23 PM IST (Updated: 24 March 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 
டிரைவரின் மனைவி 
தூத்துக்குடி ஆதிபராசக்திநகரை சேர்ந்தவர் ராஜூ. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி பவானி (வயது 62).
நேற்று மதியம் ராஜூ தனது 2-வது மகனுடன் வெளியில் சென்று உள்ளார். அப்போது பவானி மட்டும் வீட்டில் தனியாக படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் சிலர், பீரோவை திறந்து அதில் ஏதேனும் பணம் உள்ளதா என்று தேடி பார்த்தனர். 
கழுத்தை நெரித்து கொலை
அந்த சத்தத்தை கேட்டு பவானி விழித்து எழுந்தார். மர்மநபர்கள் திருட முயன்றதை பார்த்து சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள், பவானியின் தலையில் உருட்டுக்கட்டையால் ஓங்கி அடித்தனர். பின்னர் அவரது கழுத்தை நெரித்தனர். இதில் பவானி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். 
பின்னர் மர்மநபர்கள் பவானி காதில் அணிந்து இருந்த ¾ பவுன் தங்க கம்மலை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். வெளியில் சென்ற ராஜூ மீண்டும் வீட்டுக்கு வந்தபோது, தனது மனைவி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 
போலீசார் விரைந்தனர்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். கைரேகை பிரிவு உதவி இயக்குனர் கலா லட்சுமி தலைமையில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் ‘பியா’ வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இந்த கொலை குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி செந்திலாம்பண்ணையை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (45). இவர் தற்போது புதுக்கோட்டை அய்யனார் காலனியில் வசித்து வந்தார். இவர் மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
நேற்று மாலையில் முத்துப்பாண்டி தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடை அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு மர்மநபர்கள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் முத்துப்பாண்டியை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலையாளிகள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. 
இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் முத்துப்பாண்டி கஞ்சா விற்பனை செய்ததில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி, அதன் அடிப்படையிலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 
தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story