மோசமான சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையால் ‘ஓலா’, ‘டாடா’ நிறுவனங்கள் தமிழகம் சென்றுவிட்டன; சட்டசபையில் சித்தராமையா பேச்சு
கர்நாடகத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையால், ‘ஓலா’, ‘டாடா’ நிறுவனங்கள் தமிழகம் சென்றுவிட்டதாக சட்டசபையில் சித்தராமையா பேசினார்.
பெங்களூரு:
மின்சார வாகன உற்பத்தி
கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று சட்டம்-ஒழுங்கு குறித்து கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
ஒரு நாடு வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் அங்கு சட்டம்-ஒழுங்கு நல்ல நிலையில் இருக்க வேண்டும். அமைதி நிலவ வேண்டும். ஆனால் கர்நாடகத்தில் சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளது. இவை அமைதியை கெடுப்பதாக உள்ளது. இவ்வாறு இருந்தால் தொழில் முதலீடுகள் எப்படி வரும். உலகின் மிகப்பெரிய ஓலா மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கர்நாடகத்தில் தொடங்குவதாக இருந்தது. அதே போல் டாடா மின்சார வாகன உற்பத்தி ஆலையும் கர்நாடகத்தில் தொடங்குவதாக இருந்தது.
பொருளாதார வளர்ச்சி
ஆனால் கர்நாடகத்தில் நிலவும் மோசமான சட்டம்-ஒழுங்கு சூழ்நிலையால் அந்த நிறுவனங்கள் தமிழகத்திற்கு சென்றுவிட்டன. இதன்மூலம் கிடைக்க இருந்த 20 ஆயிரம் வேலை வாய்ப்புகள் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. இளைஞர்களுக்கு கல்வி கிடைக்காவிட்டால் அவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். வேலை கிடைக்காவிட்டால் எப்படி அவர்களால் பொருட்களை வாங்க முடியும். அவ்வாறு பொருட்களை வாங்க முடியாவிட்டால் பொருளாதார வளர்ச்சி எப்படி ஏற்படும்.
பொருளாதார வளர்ச்சி ஏற்படாவிட்டால் மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி எப்படி அதிகரிக்கும். அதனால் சட்டம்-ஒழுங்கிற்கும், வளர்ச்சிக்கு நேரடி தொடர்பு உள்ளது. அதனால் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. ஆனால் அந்த பணியை இந்த அரசு சரியாக செய்யவில்லை. சமீபகாலமாக அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
வன்முறை ஏற்பட்டது
சிவமொக்காவில் பஜ்ரங்தள நிர்வாகி கொலை செய்யப்பட்டார். அங்கு வன்முறை ஏற்பட்டது. கொலையான நபரின் குடும்பத்திற்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கியது. ஆனால் மங்களூருவில் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் அவரது குடும்பத்திற்கு வெறும் ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரசு இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்வது ஏன்?.
முதல்-மந்திரி போலீஸ் பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார். போலீஸ் துறையில் அதிகாரிகள் பணி இடமாற்றத்திற்கு லட்சம்-கோடி ரூபாய் வரை கைமாறுகிறது. இவ்வாறு போலீஸ் துறையில் நடந்தால் சட்டம்-ஒழுங்கை எப்படி காப்பாற்ற முடியும். தென்இந்தியாவில் உயர்கல்வியில் தமிழகம் முன்னிலையில் உள்ளது. ஆனால் கர்நாடகம் பின்தங்கி இருக்கிறது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
தண்டித்துவிட்டனர்
அப்போது குறுக்கிட்டு பேசிய போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, "முன்பு எல்லாம் போலீசார் பணி இடமாற்றத்தை கவனிக்க இடைத்தரகர்களை வைத்திருந்தனர். நான் அந்த இடைத்தரகர்களை விரட்டியடித்து விட்டேன். பணி இடமாற்றத்திற்கு லஞ்சம் வாங்குவது எப்போது இருந்து இருக்கிறது என்பது சொல்லுங்கள். உங்கள் ஆட்சி காலத்தில் இந்த நிலை இருக்கவில்லையா" என்றார்.
மீண்டும் பேசிய சித்தராமையா, "அதனால் தான் மக்கள் எங்களை தண்டித்துவிட்டனர். நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம். இந்த தவறை நீங்கள் சரிசெய்ய வேண்டியது தானே. ஏன் அதை நீங்கள் செய்யவில்லை. அப்போது நடந்தது என்பதற்காக நீங்கள் இப்போது நியாயப்படுத்துகிறீர்களா?" என்றார்.
ஒருமையில் பேசிய ஈசுவரப்பா
சட்டம்-ஒழுங்கு குறித்து சித்தராமையா பேசிக்கொண்டிருந்தார். அப்போது கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் மந்திரி ஈசுவரப்பா குறுக்கிட்டு பேசினார். அதற்கு ஆட்சேபனை தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர் ஜமீர்அகமதுகான், சட்டம்-ஒழுங்கு குறித்து பேச உங்களுக்கு (ஈசுவரப்பா) தகுதி இல்லை. உட்காருங்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த ஈசுவரப்பா, "நீங்கள் கர்நாடகத்தில் தீமூட்டும் வேலையை செய்கிறீர்கள். முதலில் உட்காருங்கள்" என்று ஒருமையில் பேசினார். இருவரும் குரலை உயர்த்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜமீர்அகமதுகான் குறித்து ஈசுவரப்பா பேசிய வார்த்தைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சித்தராமையா கேட்டு கொண்டார். அதற்கு சபாநாயகர் காகேரி, தவறான வார்ததைகளை யார் பயன்படுத்தி இருந்தாலும் அதை பரிசீலித்து நீக்க நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.
துப்பட்டா அணிய அனுமதியுங்கள்
சித்தராமையா பேசுகையில், "கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஒரு பிரிவு மாணவிகள், கல்வி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி இதுபற்றி ஆலோசிக்க வேண்டும். கல்வி கிடைக்காமல் யாரும் பாதிக்கப்படக்கூடாது. அதனால் மாணவிகள் துப்பட்டா அணிய அரசு அனுமதிக்க வேண்டும். இந்த பிரச்சினை நாம் கோர்ட்டுக்கு வெளியே பேசி தீா்த்து கொள்ளலாம். இதை அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றார்.
Related Tags :
Next Story