காரைக்கால் விநாயகர் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் சாலை மறியல்
காரைக்கால் விநாயகர் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காரைக்கால், மார்ச்.24-
காரைக்கால் விநாயகர் கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோர்ட்டு உத்தரவு
காரைக்கால் மாதா கோவில் வீதியில் பொய்யாதமூர்த்தி விநாயகர் கோவில் வாசலில் முகப்பு மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முகப்பு மண்டபம் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் காரைக்காலை சேர்ந்த சிலர் தொடர்ந்த வழக்கில், கோவில் முகப்பு மண்டபத்தை இடித்து அகற்றுமாறு கடந்த 18-ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, இந்து அமைப்புகள் சார்பில் காரைக்காலில் நேற்று முன்தினம் கடைய டைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
தி.மு.க.வினர் சாலைமறியல்
இந்த நிலையில் நேற்று காலை கோவில் முகப்பு மண்டபம் இடிக்கவுள்ளதாக தகவல் பரவியது. இதை தொடர்ந்து, கோவில் முகப்பு மண்டபத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளரும், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல். ஏ.வுமான நாஜிம் தலைமையில் கோவில் முகப்பில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மற்றும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில், பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய மாவட்ட கலெக்டர், கோவில் முகப்பிற்கு உடனே வரவேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
2 எம்.எல்.ஏ.க்கள் கைது
தகவல் அறிந்த காரைக்கால் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, நகர இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் யாரும் கலைந்து போகாததால், எம்.எல். ஏ.க்கள் நாஜிம், நாக.தியாக ராஜன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஒரு செங்கல்லை கூட...
போராட்டம் குறித்து எம்.எல்.ஏ. நாஜிம் நிருபர்களிடம் கூறுகையில், கோவில் முகப்பு மண்டபம் கட்டுவதில், கிறிஸ்தவ, முஸ்லிம் மக்கள் யாரும் மனப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், கோர்ட்டு உத்தரவுதான் இப்போது பிரச்சினையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய மாவட்ட கலெக்டர் விடுமுறையில் இருப்பது ஏற்புடையதல்ல. அவர் உடனே விடுமுறையை ரத்து செய்துவிட்டு, பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டும். அதுவரை, முகப்பு மண்டபத்தில் ஒரு செங்கல்லை கூட எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
Related Tags :
Next Story