‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பாதாள சாக்கடைக்கு மூடி எங்கே?
சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் முதல் தெருவில் உள்ள பாதாள சாக்கடை மூடி இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது. மேலும் இந்த பாதாள சாக்கடை தெருவின் நுழைவுவாயிலின் ஓரத்தில் உள்ளதால், இந்த தெருவிற்கு புதிதாக வரும் மக்கள் தவறுதலாக இதில் விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் விரைவில் இந்த பாதாள சாக்கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
- திருப்பதி ராஜா, வளசரவாக்கம்.
பஸ் பயணிகள் கோரிக்கை
அயனாவரத்தில் இருந்து தியாகராய நகர் மற்றும் சைதாப்பேட்டைக்கு நேரடியாக செல்வதற்கு பஸ் வசதிகள் இல்லை. எனவே வில்லிவாக்கத்தில் இருந்து செல்லும் 47ஏ பஸ்சை அயனாவரம் பஸ் நிறுத்தத்திலும், 23சி பஸ்சை வில்லிவாக்கத்தில் இருந்தும் இயக்கினால் அயனாவரம் பகுதியை சேர்ந்த மக்கள் நேரடியாக இந்த பகுதிகளுக்கு செல்ல வசதியாக இருக்கும்.
மேலும் வில்லிவாக்கம், ஐ.சி.எப், அயனாவரம், ஓட்டேரி ஆகிய பகுதியில் இருந்து திருவொற்றியூர் செல்ல பஸ் வசதிகள் இல்லை. எனவே கோயம்பேடு முதல் வள்ளலார் நகர் வரை செல்லும் 48சி பஸ்சை திருவொற்றியூர் வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பயணிகள்.
அகற்றப்படாத குப்பைகள்
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் மணிகண்டன் நகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குப்பைகள் அகற்றப்படவே இல்லை. இதனால் இந்த பகுதியில் குப்பைகள் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதோடு அந்த பகுதியை கடந்து செல்லும் போது முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. எனவே இந்த பகுதியில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
- புருஷோத் பிரகாஷ், மணிகண்டன் நகர்.
மீண்டும் மினி பஸ் இயக்கப்படுமா?
சென்னை மாதவரத்தில் இருந்து பொன்னியம்மன்மேடு வழியாக பெரம்பூர் செல்லும் எஸ்-61 மினி பஸ் சேவை கடந்த 3 வருடங்களாக இயக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பெரம்பூர் செல்வதற்கு பஸ்கள் மாறி மாறி செல்லும் நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் மீண்டும் எஸ்-61 பஸ்சை இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- பொன்னியம்மன்மேடு பொது மக்கள்.
குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுலாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ கண்டிகை கிராமத்தில் குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி அருகே அமைந்திருக்கும் குடிதண்ணீர் தொட்டி சேதமடைந்து தூண்களில் சிமெண்டு பெயர்ந்து ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து குடிதண்ணீர் தொட்டியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிம்பு, நாகராஜ கண்டிகை கிராமம்.
ஆஸ்பத்திரியில் அசுத்தம்
சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவின் பின்புறமுள்ள பகுதியில் குப்பைகள் சேர்ந்து அலங்கோலமாக காட்சி தருகிறது. தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்களும், நோயாளிகளும் வந்து செல்லும் ஆஸ்பத்திரியில், குப்பைகள் அதிகளவில் தேங்காமல் அவ்வப்போது அகற்றிட வேண்டும்.
- சுந்தரமூர்த்தி, திருவொற்றியூர்.
சாய்ந்த மின்கம்பம் நேராகுமா?
சென்னை பெரியமேடு எம்.வி.பத்ரன் தெருவின் உள்ள ஓட்டல் எதிரில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் ஆபத்தாக காட்சி அளிக்கிறது. எந்த நேரத்திலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இந்த மின்கம்பம் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிடும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.
- ரியாஸ் அகமது, பெரியமேடு.
குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள்
துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் தினசரி தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் வரத்தும் இந்த பகுதியில் குறைவாகவே உள்ளதால் மக்களின் அன்றாட தேவைக்கு குடிநீர் வாரியம் வழங்கும் நீரையே நம்பி உள்ளார்கள். எனவே அடிப்படை தேவையான குடிநீர் வசதி நிரந்தரமாக இந்த பகுதி மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜோஸ்வா, கண்ணகி நகர்.
பழுதான மின்விளக்குகள்
சென்னை மதுரவாயல் ஏரிக்கரை சர்வீஸ் சாலையில் இருந்து கன்னியம்மன் கோவில் செல்லும் பகுதியில் உள்ள மின் விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிக்கு உள்ளாகிறார்கள். மேலும் இருள் சூழ்ந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே மின் வாரியம் உடனடியாக ஆய்வு செய்து மின்விளக்குகள் மீண்டும் ஒளிர நடவடிக்கை மெற்கொள்ள வேண்டும்.
- பழனியப்பன், மதுரவாயல்.
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை
சென்னை கிண்டியில் உள்ள மடுவன்கரை சக்கரபாணி இணைப்பு சாலை சந்திப்பில் மழைநீர் கால்வாய் மேலே உள்ள கான்கிரீட் சேதம் அடைந்து ஆபத்தாக காட்சி தருகிறது. இதனால் இந்த பகுதியில் கடக்கும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடனே பயணம் செய்கிறார்கள். எனவே விபத்துகள் ஏதும் ஏற்படும் முன் இதை சரி செய்ய வேண்டும்.
- வாகன ஓட்டிகள்.
Related Tags :
Next Story