சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை
பழனி பகுதியில், சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஏராளமான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன.
பழனி:
பழனியில் மழை
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாகவே சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைத்தது. அதன்படி நேற்றும் காலை முதல் பழனி சுற்று வட்டார பகுதியில் கடும் வெயில் சுட்டெரித்தது.
மதியத்துக்கு பிறகு கருமேகம் திரண்டு வானம் கும்மிருட்டானது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மாலை 6 மணி அளவில் திடீரென பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
சுமார் 1 மணி நேரம் பெய்த இந்த மழையினால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பிறகு இரவு முழுவதும் இதயத்தை வருடும் இதமான சூழல் நிலவியது.
பப்பாளி மரங்கள் நாசம்
இதற்கிடையே மழை பெய்தபோது சூறாவளிக்காற்று சுழன்று அடித்தது. இதன் காரணமாக நெய்க்காரப்பட்டி அருகே கொழுமம்கொண்டான், தாழையூத்து பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த ஏராளமான பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன.
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த பப்பாளி மரங்களில், காய்கள் காய்த்து அறுவடைக்கு தயாராக இருந்தன. பூ, பிஞ்சு, காயுமாக இருந்த பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்து நாசம் ஆனதால் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பப்பாளி பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொடைக்கானலில் மழை
இதேபோல் சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது பகல் நேரத்தில் கடும் வெப்பமும், மாலை முதல் குளிரும் நிலவி வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணி முதல் இரவு வரை கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அப்பகுதியில் 80.5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது, கொடைக்கானலில் கோடைக்காலத்தில் பெய்த அதிகபட்ச மழை ஆகும்.
அதேநேரத்தில் அப்சர்வேட்டரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொடைக்கானல் நகர்ப்பகுதியில் வெறும் 3 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீர்மட்டம் உயர்வு
கொடைக்கானலில் பெய்த கனமழையினால், நகருக்கு குடிநீர் வழங்கும் பழைய அணை மற்றும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. இதனிடையே நேற்றும் பல்வேறு இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. அவ்வப்போது காற்று வீசியதால் பகல் நேரத்திலேயே கடும் குளிர் காணப்பட்டது.
அப்சர்வேட்டரி மற்றும் மேல்மலைப் பகுதியில் அதிக அளவு மழை பெய்துள்ளதால், அங்கு ஏற்பட்டு வரும் காட்டுத்தீக்கு தற்காலிக தீர்வு ஏற்பட்டுள்ளது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story