கோவை மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை -போலீஸ் சூப்பிரண்டு வி.பத்ரி நாராயணன் பேட்டி
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற வி.பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
கோவை
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்ற வி.பத்ரி நாராயணன் தெரிவித்தார்.
பதவி ஏற்பு
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த செல்வநாக ரத்தினம் சென்னை போலீஸ் பயிற்சி பள்ளி துணை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த வி.பத்ரி நாராயணன் கோவை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நேற்று காலை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு
கோவை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குறிப்பாக பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு செய்யப்படும். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஆண்கள் இடையே தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருட்களினால் இளைஞர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளேன் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆராய்ந்து விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட வி.பத்ரி நாராயணனுக்கு கோவை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story