செய்தித்தாள்கள் வாசிப்பே ஐ.ஏ.எஸ். ஆவதற்கு முதல்படி-கலெக்டர் சமீரன்


செய்தித்தாள்கள் வாசிப்பே ஐ.ஏ.எஸ். ஆவதற்கு முதல்படி-கலெக்டர் சமீரன்
x
தினத்தந்தி 24 March 2022 10:16 PM IST (Updated: 24 March 2022 10:16 PM IST)
t-max-icont-min-icon

செய்தித்தாள்கள் வாசிப்பே ஐ.ஏ.எஸ். ஆவதற்கு முதல்படி என்று கலெக்டர் சமீரன் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசினார்.

கோவை

செய்தித்தாள்கள் வாசிப்பே ஐ.ஏ.எஸ். ஆவதற்கு முதல்படி என்று கலெக்டர் சமீரன் அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசினார்.

கலந்துரையாடல்

கோவை அரசு கலை கல்லூரி அரசியல்-அறிவியல் துறை மற்றும் இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையம் சார்பில் ஐ.ஏ.எஸ். உள்பட சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறுவது குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் அரசு பள்ளியில்தான் முழுவதும் படித்தேன். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற செய்தித்தாள்கள் படிப்பது தான் முதல் படியாகும். பத்திரிகை வாசிப்பு உங்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்.

சாமர்த்தியம்

ஐ.ஏ.எஸ். அதிகாரி சில நேரங்களில் அரசியல்வாதிகள், விவசாயிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டி இருக்கும். இதனால் பல துறைகளில் ஒருங்கிணைந்த சாமர்த்தியம் அவசியமாகும். நாம் எப்போது கற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

 சிவில் சர்வீசஸ் தேர்வில் முழுவதும் அறிவார்ந்த நபரை மட்டும் தான் தேர்வு செய்வார்கள் என்று கூற முடியாது. சாதாரண வாழ்க்கையில் இருந்து சேவை நோக்கத்துடன் வருபவர்களுக்கும் முன்னுரிமை கொடுப்பார்கள்.

 இதில் தேர்வாக ஆங்கிலம் அல்லது தமிழ் மொழி தெரிந்தால் போதுமானது. எனக்கு தமிழகத்தில் பணி வாய்ப்பு கிடைத்ததால் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியை நான் கற்றுக் கொண்டேன். 

சந்தேகங்கள்

நான் ஐ.ஏ.எஸ் ஆக தேர்வான சமயத்தில் உயர் அதிகாரியிடம் அனுமதி கேட்டு கிராம நிர்வாக அலுவலராக சில நாட்கள் பணிபுரிந்தேன். இதை தொடர்ந்து 2013-ம் ஆண்டு பட்டா உள்பட வருவாய் துறை ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அந்த அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மாணவ- மாணவிகள் சிலர் கலெக்டரிடம் சந்தேகங்களை கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இதில் கோவை அரசு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி, இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சியாளரும் பேராசிரியருமான கனகராஜ், பொருளாதாரத்துறை பேராசிரியர் ஷோபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story