முதுமலை-மசினகுடி சாலையில் புலி நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை- மசினகுடி சாலையில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
கூடலூர்
முதுமலை- மசினகுடி சாலையில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
புலிகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி காரணமாக பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மான்கள், காட்டெருமைகள் உணவு தேடி அலைந்து வருகிறது. இதனால் இந்த விலங்குகள் முதுமலை-மசினகுடி சாலையை கடந்து செல்கிறது.
எனவே அந்த வனவிலங்குகளை வேட்டையாட சிறுத்தை, புலி போன்றவை சாலையோரத்தில் நடமாடி வருகிறது. கடந்த 2 வாரமாக இந்த சாலையில் புலிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
3 நாட்களுக்கு முன்பு ஒரு புலி சாலையோரத்தில் மேய்ந்து கொண்டு இருந்த புள்ளிமானை வேட்டையாடி சென்றது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியும் அடைந்தனர்.
சாலையை கடந்தது
இந்த நிலையில் காலை 9 மணியளவில் மசினகுடியில் இருந்து முதுமலை தெப்பக்காடு நோக்கி ஒரு ஜீப் சென்று கொண்டு இருந்தது. அப்போது உடல் முழுவதும் சேறு பூசிய நிலையில் ஒரு புலி சாலையை கடந்தது.
இதை பார்த்ததும் ஜீப் டிரைவர் மற்றும் அதற்குள் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த புலி சாலையை கடக்கும் வரை சற்று தூரத்திலேயே ஜீப் நிறுத்தப்பட்டது. பின்னர் புலி சாலையை கடந்து சென்ற பின்னர் ஜீப் புறப்பட்டு சென்றது.
கவனமாக செல்ல அறிவுரை
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை மசினகுடி சாலையில் தற்போது புலியின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும்.
அத்துடன் எக்காரணத்தை கொண்டும் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கீழே இறங்கக்கூடாது. அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story