காசநோய் கணக்கெடுப்பு போட்டியில் நீலகிரிக்கு வெள்ளி பதக்கம் கலெக்டர் தகவல்
காசநோய் குறைவாக உள்ளதை கண்டறிய 15 கிராமங்களில் நடந்த கணக்கெடுப்பு பணியில் நீலகிரிக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி
காசநோய் குறைவாக உள்ளதை கண்டறிய 15 கிராமங்களில் நடந்த கணக்கெடுப்பு பணியில் நீலகிரிக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது என்று கலெக்டர் தெரிவித்தார்.
விழிப்புணர்வு பேரணி
நீலகிரி மாவட்டம் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோய் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது. பேரணியை கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய பேரணி லோயர் பஜார், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை சென்றது.
பேரணியில் காசநோயை கண்டறிய சளி பரிசோதனை அவசியம், சர்க்கரை நோயாளிகளுக்கு காசநோய் தொற்று வாய்ப்பு உள்ளது, பரிசோதனை மேற்கொள்ள தயக்கம் வேண்டாம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி கல்லூரி மாணவ-மாணவிகள் பேரணியாக சென்றனர்.
கணக்கெடுப்பு பணி
இதில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, காசநோய் பணிகள் துணை இயக்குனர் சக்திவேல், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சபரீசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் கூறியதாவது:-
நீலகிரியில் கடந்த மாதம் 20 நாட்கள் காசநோய் அறிகுறி இல்லாத பகுதி கள் கண்டறியப்பட்டு, 8,120 வீடுகளில் கணக்கெடுப்பு பணி நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 145 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிப்பு குறைவாக இருந்தாலும் காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற முயற்சி காசநோய் மையம் மேற்கொண்டு வருகிறது.
வெள்ளி பதக்கம்
நீலகிரியில் 60 சதவீதம் பேருக்கு காசநோய் இல்லாததை உறுதிப்படுத்த தொற்று குறைவாக உள்ள பகுதிகளை கண்டறியும் போட்டியில் பங்கு பெற்றது. இதில் நீலகிரியில் 15 கிராமங்களை தேர்வு செய்து நடத்திய கணக்கெடுப்பு முகாமில் மாநில அளவில் வெள்ளிப் பதக்கத்தை நீலகிரி மாவட்டம் பெற்று உள்ளது.
நடமாடும் நுண்கதிர் பரிசோதனை வாகனம் மூலம் சர்க்கரை நோயாளி கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள், இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை செய்வதன் மூலம் காசநோய் தொற்று இல்லாத நிலையை உருவாக்க முடியும்.
காசநோய் சிகிச்சை பெற்று வரும் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உதவி தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. காசநோய் பாதிக்கப்பட்டவர்களை கண்காணித்து மீண்டும் பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story