ஊட்டியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தையை கொன்ற தாய்
ஊட்டியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து தீர்த்துக்கட்டிய கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி
ஊட்டியில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 1 வயது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து தீர்த்துக்கட்டிய கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் கைது செய்தனர்.
கருத்து வேறுபாடு
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவரது கணவர் கார்த்திக் (40). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு நித்தீஷ் (3), நித்தின் (1) ஆகிய 2 மகன்கள் இருந்தனர்.
கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். எனவே கார்த்திக் நித்தீசுடன் கோவையிலும், கீதா தனது 2-வது குழந்தை நித்தினுடன் வண்ணாரப்பேட்டையிலும் வசித்து வந்தார்.
குழந்தை உயிரிழப்பு
இந்த நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி குழந்தை நித்தின் திடீரென்று மயங்கி விழுந்தது. உடனே அந்த குழந்தையை கீதா ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் ஊட்டி நகர மத்திய போலீசார் மர்ம மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணை யில் குழந்தையின் உடலில் வெளிப்புற காயங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது கீதாவுக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் முடிந்து உள்ளதும், அவர்களை விட்டு பிரிந்ததும் தெரியவந்தது. அத்துடன் சமூகவலைத்தளம் மூலம் 3-வதாக கார்த்திக்குடன் தொடர்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்து உள்ளார்.
அவர் மூலம்தான் 2 குழந்தைகள் பிறந்து உள்ளன. பின்னர் கார்த்திக்கை பிரிந்த கீதாவுக்கு மேலும் பலருடன் கள்ளத்தொடர்பு இருந்ததால், அவர் தனது குழந்தையை சரிவர பராமரிக்காமல் இருந்ததையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
குழந்தை கொலை
எனவே குழந்தை கொலை செய்யப்பட்டதா என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தினர். இதை அறிய குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிவு ஊட்டி போலீசாருக்கு கிடைத்தது.
அதில் குழந்தை கொலை செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கீதாவை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி னார்கள். அதில் அவர் தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். உடனே போலீசார் கீதாவை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த கொலை தொடர்பாக கீதா அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்தார்
3-வது கணவரை விட்டு பிரிந்த கீதாவுக்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் அடிக்கடி வெளியூர் சென்று வந்து உள்ளார். எனவே அவரால் குழந்தையை சரியாக பராமரிக்க முடியவில்லை. அத்துடன் கள்ளக்காதலுக்கு அந்த குழந்தை இடையூறாகவும் இருந்து உள்ளது.
எனவே குழந்தையை கொல்ல கீதா முடிவு செய்து உள்ளார். போலீசில் சிக்காமல் குழந்தையை கொலை செய்வது குறித்து அவர் யோசித்து உள்ளார். அப்போதுதான் அவர் தனது குழந்தைக்கு அளவுக்கு அதிகமாக உணவை வாயில் திணித்து உள்ளார். அத்துடன் மதுபானமும் கொடுத்து உள்ளார்.
மூச்சுத்திணறி உயிரிழப்பு
இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. பின்னர் எதுவும் தெரியாததுபோன்று குழந்தையை தூக்கியபடி அழுதுகொண்டே ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்சென்று உள்ளார். ஆனால் குழந்தை மீது எவ்வித காயமும் இல்லாததால் போலீசார் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்த கீதா தனது கள்ளக்காதலர்களுடன் ஜாலியாக சுற்றி உள்ளார்.
ஆனால் அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கியதாக வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலுக்காக கல் நெஞ்சம் படைத்த தாய் தனது பெற்ற குழந்தையையே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story