குளத்தை ஆக்கிரமித்து நடப்பட்ட தென்னங்கன்றுகள் அகற்றம்


குளத்தை ஆக்கிரமித்து நடப்பட்ட தென்னங்கன்றுகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 March 2022 10:22 PM IST (Updated: 24 March 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

சத்திரப்பட்டி அருகே குளத்தை ஆக்கிரமித்து நடப்பட்ட ெதன்னங்கன்றுகள் அகற்றப்பட்டன.

சத்திரப்பட்டி:


சத்திரப்பட்டி அருகே புதுக்கோட்டை ஊராட்சியில் கருங்குளம் அமைந்துள்ளது. சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, தாசரிபட்டி ஆகிய கிராமங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக இந்த குளம் விளங்குகிறது.
 
இந்த குளத்தில் 1½ ஏக்கர் நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து 85 தென்னங்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு எதிரொலியாக, கருங்குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று நடந்தது.

 பொதுப்பணித்துறை நங்காஞ்சியாறு கோட்ட உதவி பொறியாளர் நாகராஜ், ஒட்டன்சத்திரம் துணை தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் தலைமையில், புதுக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி, ஊராட்சி தலைவர் ஜெயராணி, செயலர் செல்லமுத்து மற்றும் போலீசார் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. குளத்தை ஆக்கிரமித்து நடப்பட்டிருந்த தென்னங்கன்றுகள் வேரோடு பிடுங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இதுபோல பழனி வையாபுரி குளத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. பழனி ஆர்.டி.ஓ. சிவக்குமார், தாசில்தார் சசிக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள், தனியாருக்கு சொந்தமான பொருட்கள் ஆகியவை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் பஸ்நிலைய பகுதியில் இருந்து குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதி வழியாக மதினாநகர் செல்லும் பாதையை அதிகாரிகள் அடைத்தனர். 

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில், வையாபுரிகுளத்தில் நீர்ப்பிடிப்பு பகுதி அளவிடுதல், கரைகளை பலப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்றது. தற்போது குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பாதை அடைக்கப்பட்டது. இதேபோல் குளத்தில் கட்டிட கழிவுகள், குப்பைகளை கொட்டி செல்கின்றனர். வரும் நாட்களில் குளத்தில் யாரேனும் குப்பைகளை கொட்டினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story