தர்மபுரியில் ரூ.42 கோடியில் புதிய பஸ் நிலையம் கூட்டத்தில் நகராட்சி தலைவர் தகவல்
தர்மபுரியில் ரூ.42 கோடியில் புதிய பஸ் நிலையம் கூட்டத்தில் நகராட்சி தலைவர் தகவல்
தர்மபுரி:
தர்மபுரி நகரில் ரூ.42 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டப்படுகிறது என்று நகராட்சி கூட்டத்தில் தலைவர் லட்சுமி நாட்டான் மாது தெரிவித்தார்.
அவசர கூட்டம்
தர்மபுரி நகராட்சி அவசர கூட்டம் நகர மன்ற கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்று பேசினார். இதில் நகராட்சி பொறியாளர் ஜெயசீலன், உதவி பொறியாளர் சரவண பாபு, வருவாய் ஆய்வாளர் மாதையன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் உள்ள காலி மனைகளுக்கு நில வரி விதிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து அந்த இடத்தில் புதிய கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இதேபோன்று சொத்து வரி நிர்ணயம் செய்த பழைய வீடுகளை இடித்து புதிதாக கட்டப்படும் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பழைய காலி மனை நில வரிகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் ரூ.13 லட்சம் பழைய காலி மனை சில வரிகளை ரத்து செய்யும் தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
புதிய பஸ் நிலையம்
கூட்டத்தில் நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது பேசியதாவது:-
தர்மபுரி நகரில் பென்னாகரம் சாலையில் தனியார் பங்களிப்புடன் 10 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அதற்கான டெண்டர் விடப்பட்டு ரூ.42 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் கட்டி தனியாரே 25 ஆண்டுகள் பராமரிக்க உள்ளனர். தகுதி உள்ள 2 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்ற நிலையில் பி.வி.கே. என்ற நிறுவனம் புதிய பஸ் நிலையத்தை கட்டி ஆண்டுக்கு ரூ.55 லட்சத்து 40 ஆயிரம் நகராட்சிக்கு வருவாய் அளிக்க உள்ளனர். இந்த கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகள் நடைபெற உள்ளது. விரைவில் நகராட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றி பணி ஆணை வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.
Related Tags :
Next Story