அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்
அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழி நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
சீர்காழி:
அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சீர்காழி நகரசபை கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நகரசபை கூட்டம்
சீர்காழி நகரசபை சாதாரண கூட்டம் தலைவர் துர்கா பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. ஆணையர்(பொறுப்பு) இப்ராஹிம், துணைத்தலைவர் சுப்பராயன், மேலாளர் காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜ கணேஷ் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
ராஜேஷ்(சுயேச்சை):- நகரசபை தலைவர் அனைத்து வார்டுகளிலும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து பார்வையிட வேண்டும் அப்போதுதான் அனைத்து வார்டுகளில் உள்ள குறை, நிறைகள் தெரிய வரும்.
ராஜேஷ்(தே.மு.தி.க):- சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். சீர்காழி நகர் பகுதியில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அலைக்கழிக்கக்கூடாது
சுப்பராயன்(துணைத்தலைவர்):-நகராட்சி அலுவலகங்களில் பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றிதழ் பெற வரும் பொதுமக்களை அதிகாரிகள் அலைக்கழிக்கக்கூடாது. நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படும் சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பணத்திற்கு உடனுக்குடன் அதிகாரிகள் ரசீது வழங்க வேண்டும்.
ரமாமணி(அ.தி.மு.க):- எனது வார்டு சீர்காழி நகர் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ளது. கிராமங்களை சார்ந்த பகுதியாகும் இந்த பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்வது கிடையாது. மேலும் இந்த பகுதியில் குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரப்பணிகள் செய்து தர வேண்டும் புளிச்சகாடு பகுதியிலேயே தனியாக ரேஷன் கடை செயல்பட தலைவர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வேகத்தடை
வேல்முருகன்(பா.ம.க):- சீர்காழி நகராட்சி பகுதியில் சுமார் 65 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காவை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் புறவழி சாலையிலேயே பஸ் பயணிகளை இறக்கி விடப்படுவதால் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் எனது பகுதியில் கூடுதல் தெருவிளக்கு அமைத்து தர வேண்டும். விபத்துக்களை தவிர்க்கும் வகையில் புதிய பஸ் நிலையம் எதிரில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
தேவதாஸ்(தி.மு.க):- எனது வார்டு பகுதியில் செயல்படாமல் உள்ள பொது சுகாதார வளாக கழிப்பிட கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டும்.மேலும் கூடுதலாக பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.
ரம்யா(தி.மு.க):- எனது வார்டு பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் கோவில் இடமாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் நகராட்சி சார்பில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முழுமதி(ம.தி.மு.க):- எனது வார்டு பகுதிகளில் சாலை வசதி, தெருவிளக்கு வசதி மிகவும் மோசமாக உள்ளது. நிலத்தடி நீர் உப்பு நீராக உள்ளது. எனவே எனது வார்டை தலைவர் நேரில் வந்து ஆய்வு செய்து அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முன்மாதிரி நகராட்சியாக
ஆணையர்(பொறுப்பு):- உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவர்:- உறுப்பினர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன். சீர்காழி நகராட்சியை முன்மாதிரி நகராட்சியாக உயர்த்தும் வகையில் தினமும் அலுவலகத்திற்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற பாடுபடுவேன். உறுப்பினர்களின் முழு ஒத்துழைப்போடு சீர்காழி நகராட்சி சிறப்பாக செயல்பட பாடுபடுவேன் என்றார்.
கூட்டத்தில் நகர ஆய்வாளர் நாகராஜ், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை, கணக்கர் சார்லஸ், வருவாய் ஆய்வாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story