பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை


பெரியம்மாவை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 24 March 2022 10:54 PM IST (Updated: 24 March 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே செலவிற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்து பெரியம்மாவை கொலை செய்ததோடு அதனை பார்த்தவரையும் குத்திய வாலிபருக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே செலவிற்கு பணம் தராததால் ஆத்திரமடைந்து பெரியம்மாவை கொலை செய்ததோடு அதனை பார்த்தவரையும் குத்திய வாலிபருக்கு கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
பஸ் டிரைவர்
ராமநாதபுரம் அருகே உள்ள வாணி பாத்திமாநகரை சேர்ந்தவர் அப்துல்கபூர் (வயது58). இவரின் மனைவி சபிதாபானு (52). அப்துல்கபூரின் தம்பி சேக்அலாவுதீன் மகன் முகம்மது அராபுதீன் என்ற ரபீக் (வயது32). ராமநாதபுரம் சிவஞானபுரம் புதுப்பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தார். இவர் ஆம்னி பஸ் டிரைவராக பணியாற்றி வந்தார். 
ரபீக் கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி செலவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் பெரியம்மா சபிதாபானுவிடம் கேட்டு வாங்க நினைத்துள்ளார். பெரியம்மா சபிதா பானு தர மறுத்தால் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்ற முடிவோடு வாணி கிராமத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். 
கொலை
அங்கு சென்று பணம் கேட்டபோது சபிதாபானு தரமறுத்து கண்டித்தாராம். இதனால் ஆத்திரமடைந்த முகம்மது அராபுதீன் என்ற ரபீக் தான் கொண்டு சென்ற கத்தியால் சரமாரியாக சபிதாபானுவை குத்தியதோடு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அவரின் சத்தம்கேட்டு அங்கு வந்த சபிதாபானுவின் மருமகள் ஜெசிமா (21) வை கண்டதும் தன்னை காட்டி கொடுத்துவிடுவாரோ என்று அச்சமடைந்து அவரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். 
இதுபற்றி தகவல் அறிந்த ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் அங்கு விரைந்து சென்று சபிதாபானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெசிமா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து முகம்மது அராபுதீன் ரபீக்கை கைது செய்தனர். 
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா பெரியம்மாவை கொலை செய்த முகம்மது அராபுதீன் ரபீக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.2½ லட்சம் அபராதமும் அதனை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கீதா ஆஜரானார்.

Next Story