இலங்கையில் இருந்து அகதிகள் வருகை எதிரொலி: குமரியில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு


இலங்கையில் இருந்து அகதிகள் வருகை எதிரொலி: குமரியில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 March 2022 11:25 PM IST (Updated: 24 March 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளதால் குமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாகர்கோவில், 
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகள் வருகை அதிகரித்துள்ளதால் குமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு தவிக்கிறது. இதனால் அங்கு பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.283 என்றும், டீசல் ஒரு லிட்டர் ரூ.176 என்றும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
அரிசியின் விலை ஒரு கிலோ ரூ.448 (இந்திய மதிப்பில் ரூ.128), ஒரு லிட்டர் பாலின் ரூ.263 (இந்திய மதிப்பில் ரூ.75) ஆக உள்ளது. 
கியூ பிரிவினர் கண்காணிப்பு
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தவித்து வரும் மக்கள் கடல் வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வரதொடங்கி உள்ளனர். அவ்வாறு அகதிகளாக வந்தவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 
இதுபோல் கடல்வழியாக இலங்கை அகதிகள் பலரும் குமரி மாவட்டத்துக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், கடற்கரை பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கோழிப்போர்விளை, பழவிளை, பெருமாள்புரம் மற்றும் ஞாறான்விளை ஆகிய பகுதிகளில் இலங்கை அகதிகள் முகாம்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் புதிதாக யாராவது வந்துள்ளார்களா? என போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அரசின் அனுமதி பெற்று வெளியே வீடுகளில் தங்கியுள்ளவர்கள் மற்றும் குடியுரிமை பெற்றவர்கள் வீடுகளையும் கியூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story