பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்துபோலீசில் ஒப்படைத்தனர்


பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்துபோலீசில் ஒப்படைத்தனர்
x
தினத்தந்தி 24 March 2022 11:32 PM IST (Updated: 25 March 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் செயின் பறித்த நபரை பொதுமக்கள் பிடித்துபோலீசில் ஒப்படைத்தனர்.

திருவலம்

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே உள்ள கம்பராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி வசந்தா (வயது 55). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் அங்குள்ள நிலத்திற்கு தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர் வசந்தாவை மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த செயினை கழற்றி தருமாறு மிரட்டி உள்ளார். அதற்கு வசந்தா மறுத்துள்ளார். உடனே அந்த நபர் வசந்தாவை தாக்கி  செயினை பறித்து செல்ல முயன்றுள்ளார். அப்போது வசந்தா செயினை பிடித்து கொண்டதால் செயினின் ஒருபகுதி (5 பவுன்) மர்மநபர் கையில் சிக்கி உள்ளது. அந்த நகையுடன் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். இதனால் வசந்தா கூச்சல் போட்டுள்ளார்.

 இதனையடுத்து அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், செயின் பறித்து சென்ற நபரை பிடித்து, திருவலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபு (42) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story