வேலூர் சைதாப்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் மறியல்
வேலூர் சைதாப்பேட்டையில் கழிவுநீர் கால்வாயை தூர்வாரக்கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
வேலூர்
வேலூர் மாநகராட்சி 36-வது வார்டு சைதாப்பேட்டை, நல்லான்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் குப்பையை சரியாக அகற்றுவது இல்லை என்றும், அதனால் கால்வாயில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சைதாப்பேட்டை பி.டி.சி. சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் கால்வாயை சீரமைக்காததால் மழைக்காலங்களில் மலையில் இருந்து வரும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கால்வாய் அடைப்பு காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு போலீசார் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story