அம்புக்கோவில் வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
வீரமாகாளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள அம்புக்கோவில் கிராமத்தில் வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகபடிதாரர்கள் சார்பில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு அம்பாளின் வீதி உலா நடந்தது. நேற்று இறுதி திருவிழா நடந்தது. இதையொட்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டார்.விழாவையொட்டி தொடர்ந்து 10 நாட்கள் நாடகம் இசை நிகழ்ச்சி போன்றவை நடந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். மேள தாளங்கள் வாணவேடிக்கை முழங்க தேரில் வலம் வந்த அம்மனை வீதிகளில் கூடி நின்று பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story