கீரமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி பெரியாத்தாள் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன


கீரமங்கலம் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி பெரியாத்தாள் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டன
x
தினத்தந்தி 24 March 2022 11:59 PM IST (Updated: 24 March 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய ஊர்களை உள்ளடக்கியுள்ள பெரியாத்தாள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் அகற்றினார்கள். தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டது.

கீரமங்கலம்:
பெரியாத்தாள் ஏரி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி ஆகிய ஊர்களை உள்ளடக்கியுள்ளது பெரியாத்தாள் ஏரி. சுமார் 400 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பினால் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று கூறப்படுகிறது. பல ஆணடுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ள ஏரிக்கு கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து தண்ணீர் வரும். அன்னதானக் காவேரி கால்வாய் உள்ளிட்ட வரத்து வாரிகளும் மராமத்து செய்யப்படாததால் ஏரிக்கான தண்ணீர் வரத்து இன்றி வறட்சியாக காணப்பட்டது. 
இந்த நிலையில் நீரின்றி அமையாது உலகு அமைப்பினர் பொது மக்களிடம் நிதி வசூல் செய்து அன்னதானக் காவேரி கால்வாயை மராமத்து செய்தனர். மேலும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் 2 கி.மீ. தூரத்திற்கு கால்வாயை சீரமைத்தனர். இதனால் சில நாட்கள் பெரியாத்தாள் ஏரிக்கு தண்ணீர் வந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
பெரியாத்தாள் ஏரி மற்றும் தண்ணீர் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீரின்றி அமையாது உலகு அமைப்பின் தலைவர் ராஜேந்திர சேதுபதி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் ஏரி மற்றும் வரத்து வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. 
இந்த உத்தரவையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து கீரமங்கலம் போலீசார் பாதுகாப்போடு நில அளவை செய்து எல்லைக் கல் நட்டனர். நேற்று காலை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கருணாகரன் தலைமையில் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கோலேந்திரன், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில்நாயகி, துணை வட்டாட்சியர் பழனியப்பன், சரக வருவாய் ஆய்வாளர்கள் ரவி, துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர்கள் புஜ்பராஜ், கணேசன், ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்கள். பொக்லைன் எந்திரங்கள் மூலம் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் உள்ள பலா, தென்னை, தைல மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு அகற்றப்பட்டது. 
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும்
மேலும் கடலை, சோளம் போன்ற உள்ளிட்ட பயிர்களை விவசாயிகளே அகற்றிகொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அனனதானக் காவேரி உள்ளிட்ட வரத்து வாரிகள் நில அளவை செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள். கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்னும் சில நாட்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடரும் என கூறப்படுகிறது.
 விவசாயிகள் கோரிக்கை மறுப்பு
பெரியாத்தாள் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வரும் நிலையில் நீண்ட காலம் பலன் தரக்கூடிய பலா, தென்னை உள்ளிட்ட மரங்களை அழிக்காமல் அரசே கையகப்படுத்தி பராமரிக்கவும் மேற்பலன்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ஈட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் காட்டு மரங்கள் தவிர மற்ற மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டது.

Next Story