வெண்ணந்தூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகை
வெண்ணந்தூர் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வெண்ணந்தூர்:
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுனுக்கு கீழ் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெண்ணந்தூர் அருகே உள்ள அத்தனூர் ஆயிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான ஆணைகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் 5 பவுனுக்கு கீழ் நகைகளை வைத்து கடன் பெற்ற 100-க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென அத்தனூர் ஆயிபாளையம் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் மற்ற கூட்டுறவு சங்கங்களில் வழங்கியது போல், தங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கவேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் இன்னும் 2 நாட்களில் 5 பவுனுக்கு கீழ் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களுக்கு, நகைக்கடன் தள்ளுபடிக்கான ஆணைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story