பரமத்திவேலூரில் பரபரப்பு; நிதி நிறுவன அதிபரை கொல்ல முயற்சி-கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவியே கூலிப்படையை ஏவியது அம்பலம்
பரமத்திவேலூரில் நிதி நிறுவன அதிபர் அரிவாளாள் வெட்டப்பட்டார். கள்ளக்காதலை கண்டித்ததால் அவருடைய மனைவியே கூலிப்படையை ஏவியது அம்பலமாகியுள்ளது.
பரமத்திவேலூர்:
நிதி நிறுவன அதிபர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சண்முகாநகரை சேர்ந்தவர் நடராஜன் (வயது 52). இவர் நாமக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மேலும் 2 பொக்லைன் எந்திரங்கள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கிருத்திகா (36). இந்த தம்பதிக்கு சுஷித் (19) என்ற மகனும், வேனிஷா (16) என்ற மகளும் உள்ளனர்.
நடராஜன் தனது பொக்லைன் எந்திரங்களை தண்ணீர்பந்தல்மேடு பகுதியை சேர்ந்த கோபால் (35) மேற்பார்வையில், வாடகைக்கு விட்டு வந்தார். இதனால் கோபால் அடிக்கடி நடராஜன் வீட்டுக்கு வரவு, செலவு கணக்குகளை ஒப்படைக்க சென்று வந்தார். அப்போது கிருத்திகாவுக்கும், கோபாலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரம்
இதுகுறித்து நடராஜனுக்கு தெரியவந்ததால் அவர், கிருத்திகாவை கண்டித்தார். மேலும் 2 பேருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை கிருத்திகா கடைக்கு சென்று வருவதாக கணவரிடம் கூறி சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நடராஜனை, அங்கு வந்த மர்மநபர் திடீரென அரிவாளால் வெட்டினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நடராஜன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் நடராஜனை அரிவாளால் வெட்டிய நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
மேலும் நடராஜனை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை அரிவாளால் வெட்டிய நபரை பரமத்திவேலூர் போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில் அவர் சேந்தமங்கலம் அருகே உள்ள அக்கியம்பட்டி நத்தக்காட்டை சேர்ந்த யோகேஸ்வரன் (29) என்பதும், அவரை கிருத்திகா, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்ட கூலிப்படையாக ஏவியதும் தெரியவந்தது.
மனைவி கைது
இதையடுத்து போலீசார் கிருத்திகாவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் நடராஜனை கூலிப்படையை ஏவி கொல்ல முயன்றதாக தெரிவித்தார். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகா, யோகேஸ்வரனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கோபாலை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரமத்திவேலூரில் கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனை, மனைவியே கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story