நாமக்கல் நகராட்சியில் வரி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை-ஆணையாளர் சுதா எச்சரிக்கை
நாமக்கல் நகராட்சியில் வரி நிலுவை தொகையை செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆணையாளர் சுதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்:
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரி நிலுவை தொகை
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் நகராட்சி மூலமாக விதிக்கப்பட்ட 7,264 காலிமனை வரி விதிப்புகளில் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 96 ஆயிரம் இதுவரை நில உரிமைதாரர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இவற்றில் பெரும்பாலானவை நல்லிபாளையம், தும்மங்குறிச்சி, காவேட்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் ஆகும்.
அதேபோன்று நகராட்சி மூலம் விதிக்கப்பட்ட 3,690 தனிநபர் தொழில்வரி விதிப்புகளுக்கு இதுவரை ரூ.1 கோடியே 61 லட்சத்து 26 ஆயிரம் நிலுவையாக உள்ளது. தனிநபர் தொழில்வரி விதிப்புகள் அனைத்தும் சேலம் ரோடு, திருச்சி ரோடு, கடைவீதி, பிரதான சாலை, திருச்செங்கோடு ரோடு, மோகனூர் ரோடு மற்றும் பரமத்தி சாலைகளில் உள்ள கடைக்காரர்களால் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.
ஜப்தி நடவடிக்கை
மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டணங்கள் மற்றும் பாதாள சாக்கடை கட்டணங்கள் ஆகியவைகளும் நகராட்சிக்கு செலுத்த வேண்டி உள்ளது. இந்த நிலுவை தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தாத நபர்களின் மீது நகராட்சி மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை அல்லது ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே அனைத்து வரி மற்றும் கட்டண நிலுவை தொகையை வருகிற 31-ந் தேதிக்குள் செலுத்தி நகராட்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Related Tags :
Next Story