கூட்டுறவு வங்கி முற்றுகை-சாலை மறியல்


கூட்டுறவு வங்கி முற்றுகை-சாலை மறியல்
x
தினத்தந்தி 25 March 2022 12:37 AM IST (Updated: 25 March 2022 12:37 AM IST)
t-max-icont-min-icon

வத்திராயிருப்பு, திருச்சுழி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

வத்திராயிருப்பு,
 
வத்திராயிருப்பு, திருச்சுழி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர். நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக குற்றம் சாட்டினார்கள்.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்துள்ளவர்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வாக்குறுதியாக அறிவித்தது.இந்த நிலையில் தி.மு.க. அரசு தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் அடகு வைத்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இந்த நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று பின்பு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் தற்போது ஒவ்வொரு வங்கியிலும் தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது தகுதியுள்ள நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியல்

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் வைத்தவர்களுக்கு நகை தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படாத நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வத்திராயிருப்பு-அழகாபுரி சாலையில் மகாராஜபுரம் கூட்டுறவு வங்கி முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கூட்டுறவு வங்கியையும் முற்றுகையிட்டனர்.இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. 
5 பவுனுக்கு கீழ் அடகு வைத்த அனைவருக்குமே நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி இருக்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

முற்றுகை

திருச்சுழி தமிழ்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ்பாடி, கரிசல்குளம், ஆலடிபட்டி, ராமசாமிபட்டி, சித்தலக்குண்டு, ஒத்தவீடு உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் நகைகளை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்றுச் சென்றுள்ளனர். இந்த நிலையில் தமிழ்பாடி பகுதியில் பல்வேறு நபர்களுக்கு தள்ளுபடி இல்லை என வங்கி அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் உள்ளூர் கிராம மக்களை அலைக்கழித்து வருவதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டினார்கள். தமிழ்பாடி கூட்டுறவு வங்கி முன்பு நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு நகைக்கடன் வழங்கியதில் குளறுபடி இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள், காவல்துறையினர் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Next Story