ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்


ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 25 March 2022 1:52 AM IST (Updated: 25 March 2022 1:52 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கக்கோரி கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து ஊராட்சிகளுக்கும் ஊராட்சி நிர்வாக செலவினங்களுக்கு 6-வது நிதிக்குழு நிதி வழங்குவதில்லை. ஆகவே நிதி வழங்க துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் ஒதுக்கப்படும் பணிகளில் அரசியல் குறுக்கீடு இருந்து வருகிறது. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவருக்கே ஊராட்சி பணிகள் என்ற உறுதியளிப்பு வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடலூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

தர்ணா போராட்டம்

ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கூட்டமைப்பை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நேற்று மாலை கடலூர் ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்றிய அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊராட்சிக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகர், பொருளாளர் குமார், கவுரவ தலைவர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டமைப்பை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். அதையடுத்து அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவி ஆகியோரை சந்தித்து மனு அளித்த அவர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story