ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஜெயங்கொண்டம்:
125 ஏக்கர் பரப்பளவில்...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆமணக்கந்தோண்டி அருகே சோழ மாமன்னர் ராஜேந்திர சோழனால் வெட்டப்பட்ட சோழகங்கம் என்ற பொன்னேரி உள்ளது. இந்த ஏரி சுமார் 850 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கருக்கு பாசன வசதி தரக்கூடியதாகவும் இருந்தது. கடந்த பல ஆண்டுகளாக பொன்னேரி முறையாக முழுமையாக தூர்வாரப்படாத காரணத்தால் தற்போது ஆக்கிரமிப்புகள் அதிகமான நிலையில், ஏரியின் ஒரு பகுதி பாசன நிலமாக மாறியது. இதனால் மழைக்காலங்களில் நீரின் கொள்ளளவும் குறைந்ததால் ஏரி மூலம் பாசனம் குறைந்தது.
தற்போது தமிழக அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நிலையில், பொன்னேரியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 125 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகள் அளவீடு செய்யப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடலை, தர்பூசணி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் டிராக்டர் மூலம் பயிர் சாகுபடியை அழித்து, பொக்லைன் எந்திரம் மூலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலாத்தலம்
ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி கரைகள் அமைக்கப்படும் பட்சத்தில், வரக்கூடிய மழைக்காலங்களில் பொன்னேரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீரை தேக்கி பயன்படுத்த முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கிடையே பொன்னேரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி படகு சவாரி விடும் வகையில் சுற்றுலா தலமாக அமைக்க வேண்டும் என்று சட்டசபையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜாசிதம்பரம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
பயிர் சாகுபடி அழிப்பு
ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரி சுமார் 98 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் உள்ள நீரைக் கொண்டு கோவில் வாழ்க்கை, நெட்டலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு 2 மதகுகள் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசனம் செய்து வந்தனர். தற்போது இந்த ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலத்தில் விவசாயிகள் நெல், எள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர். தற்போது நெல் அறுவடை முடிந்த நிலையில் எள் விதைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஆண்டிமடம் வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் டிராக்டர் மூலம் பயிர் சாகுபடியை அழித்து, பொக்லைன் எந்திரம் மூலம் அளவீடு செய்யப்பட்ட பகுதிகளில் கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story