பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய திருடன்


பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய திருடன்
x
தினத்தந்தி 25 March 2022 3:29 AM IST (Updated: 25 March 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு திருடன் தப்பியோடி விட்டான்

மங்களூரு: மங்களூருவில் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்திவிட்டு திருடன் தப்பியோடி விட்டான். 
இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

போலீசார் மீது தாக்குதல்

மங்களூரு அருகே கோனஜே பகுதியை சேர்ந்தவர் முகமது (வயது 35). இவர் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். இவர் சமீபத்தில் மங்களூரு நகரில் உள்ள கைக்கெடிகார கடையில் புகுந்து, விலையுயர்ந்த கைக்கெடிகாரங்களை திருடி சென்றுவிட்டார். அந்த வழக்கில் போலீசார் அவரை தேடி வந்தனர். 

இந்த நிலையில், முகமது கடந்த சில தினங்களுக்கு முன்பு பந்தர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் திருடிய கைக்கெடிகாரத்தை விற்பனை செய்ய நின்று கொண்டிருந்தார். இதனை அறிந்த போலீசார், விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றனர். அந்த சமயத்தில் முகமது, போலீஸ்காரர்கள் வினோத் உள்பட 3 பேரை தாக்கிவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். இந்த தாக்குதலில் போலீஸ்காரர்கள் 3 பேர் பலத்த காயமடைந்தனர். 

சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து

இதையடுத்து போலீசார் முகமதுவை வலைவீசி தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் முகமது, பாவூர் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டில் பதுங்கி இருப்பதாக கோனஜே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரணப்பாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அவருடைய தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.  

அப்போது அங்கு பதுங்கி இருந்த முகமதுவை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர் அங்கிருந்து தப்பியோடினார். முகமதுவை சப்-இன்ஸ்பெக்டர் சரணப்பா பிடிக்க முயன்றார். அப்போது முகமது தான் வைத்திருந்த கத்தியால் சரணப்பாவை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். போலீசார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.

வலைவீச்சு

இதையடுத்து கத்திக்குத்து காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சரணப்பாவை சக போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கோனஜே போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய முகமதுவை வலைவீசி தேடி வருகிறார்கள். 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை குத்தி விட்டு தப்பி ஓடிய முகமதுவை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். 

Next Story