ஜேம்ஸ் பட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, சிவராஜ்குமார் சந்திப்பு
ஜேம்ஸ் பட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, சிவராஜ்குமார் சந்தித்து பேசினார்
பெங்களூரு: ஜேம்ஸ் பட விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, சிவராஜ்குமார் சந்தித்து பேசினார்.
ஜேம்ஸ் திரைப்படம்
புனித் ராஜ்குமார் இறுதியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் கடந்த 17-ந் தேதி வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
தியேட்டர்கள் முன்பு ஜேம்ஸ் திரைப்படத்தை திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ், ஆர்.ஆர்.ஆர். திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்த தியேட்டர் நிர்வாகங்கள், ஜேம்ஸ் திரைப்படத்தை நிறுத்த முடிவு செய்தது.
இதற்கு கன்னட அமைப்பினர், புனித் ராஜ்குமாரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
உரிமையாளர்கள் முடிவு
இந்த சூழ்நிலையில் பெங்களூரு ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வீட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை, புனித் ராஜ்குமாரின் சகோதரரும், நடிகருமான சிவராஜ்குமார், அவரது மனைவி கீதா, ஜேம்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கிஷோர் பதிகொண்டா ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது ஜேம்ஸ் பட விவகாரம் குறித்து பேசியதாக தெரிகிறது. இதன்பிறகு சிவராஜ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது கூறியதாவது:-
ஒரு நல்ல திரைப்படம் தியேட்டருக்கு வருவதை யாரும் தடுக்க கூடாது. ஜேம்ஸ் திரைப்படம் தற்போது அனைத்து தியேட்டர்களிலும் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆர்.ஆர்.ஆர்., தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த திரைப்படங்களை திரையிடுவது உரிமையாளர்கள் முடிவு.
கன்னட அமைப்பினர் போராட்டம்
ஜேம்ஸ் பட விவகாரத்தில் எந்த அரசியல் கட்சி சார்பிலும் நான் முதல்-மந்திரியை சந்தித்து பேசவில்லை. நான் அரசியல் செய்யவில்லை. ஜேம்ஸ் பட விவகாரத்தில் புனித் ராஜ்குமார் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். கன்னட மொழி, கன்னட சினிமா என்று வரும் போது நான் குரல் கொடுப்பேன். ஜேம்ஸ் பட விவகாரத்தில் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆதங்கம் உள்ளது. அனைவரும் அமைதி காக்க வேண்டும். ஜேம்ஸ், ஆர்.ஆர்.ஆர்., தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படங்களுக்கு இடையே எந்த சம்பந்தமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜேம்ஸ் திரைப்படத்தை நிறுத்தும் முடிவை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெங்களூரு திரிவேணி தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த ஆர்.ஆர்.ஆர்.படத்தின் பேனரை, கன்னடர் அமைப்பினர் கிழித்தததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story