தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் ஆஸ்பத்திரியில் 34 படுக்கை வசதிகளுடன் பன் மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டு


தண்டையார்பேட்டை அரசு தொற்றுநோய் ஆஸ்பத்திரியில் 34 படுக்கை வசதிகளுடன் பன் மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டு
x
தினத்தந்தி 25 March 2022 2:07 PM IST (Updated: 25 March 2022 2:07 PM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை தொற்றுநோய் ஆஸ்பத்திரியில், சர்வதேச காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. ஜான் எபினேசர், துணை கமிஷனர் டாக்டர் எஸ்.மனிஷ், மாமன்ற உறுப்பினர்கள் நேதாஜி உ.கணேசன், தேவி கதிரேசன், நா.குமாரி, ந.பவித்ரா, தண்டையார்பேட்டை தொற்றுநோய் ஆஸ்பத்திரி இயக்குநர் டாக்டர் தவமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கி சிறப்பாக பணியாற்றிய அரசு, தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்களை பாராட்டி அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, அவர் காசநோய் சிகிச்சையின் போது ஏற்படும் பக்க விளைவுகளுக்கான சிகிச்சை அளிக்க ஏதுவாக தொற்றுநோய் ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள 34 படுக்கை வசதிகளுடன் கூடிய பன் மருந்து எதிர்ப்பு காசநோய் வார்டினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, பெருநிறுவன சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தொற்றுநோய் ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆக்சிஜன் மையத்தையும் திறந்து வைத்தார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக உலக காசநோய் தின விழிப்புணர்வு விழா நேற்று திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டுகாசநோய் விழிப்புணர்வு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார்.


Next Story