வீடு இடிந்து மலைவாழ் விவசாயி காயம்


வீடு இடிந்து மலைவாழ் விவசாயி காயம்
x
தினத்தந்தி 25 March 2022 5:33 PM IST (Updated: 25 March 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

வீடு இடிந்து மலைவாழ் விவசாயி காயம்

வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால், வீடு இடிந்து மலைவாழ் விவசாயி காயம் அடைந்தார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக தொட்டில்கட்டி மலைவாழ் மக்கள் சுமந்து வந்தனர். 
மலைவாழ் மக்கள் குடியிருப்பு 
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுய தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
வனப்பகுதியில் தகவல் தொடர்பு மற்றும் பாதை வசதி இல்லாததால் அவசரகால உதவிகளை பெறுவதில் மலைவாழ் மக்கள் சிரமப்படுகிறார்கள்.  அந்த வகையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் திடீரென பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் குழிப்பட்டி யைச் சேர்ந்த விவசாயி பொன்னுச்சாமி (வயது 47 என்பவர் காயமடைந்தார். அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி சுமந்து வந்தனர்.
இது குறித்து குழிப்பட்டி மலைவாழ் மக்கள் கூறியதாவது
மருத்துவ வசதி
அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வருகின்ற எங்களுக்கு சமதளப்பரப்பு போன்று எந்த ஒரு உதவியும் எளிதில் கிடைக்காது. பிரசவம், உடல்நலக்குறைவு, விபத்து, வனவிலங்குகளால் ஏற்படும் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப்படுபவர்களை எளிதில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை நிலவுகிறது. அதைத்தொடர்ந்து தொட்டில் கட்டி அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஒற்றையடிப்பாதையின் வழியாக அடிவாரத்தில் பொன்னாலம்மன் சோலை பகுதிக்கு சுமந்து வந்து அங்கிருந்து வாகனத்தை பிடித்து ஆஸ்பத்திரியை அடைவதற்குள் சம்பந்தப்பட்ட நபரின் உயிர் கேள்விக்குறியாகி விடுகிறது.
மேலும் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு பாதை மற்றும் தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை  செய்து தருமாறும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஆனால் அதிகாரிகள் எங்களது கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.இதனால் பெருத்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம். எனவே எங்களது நலனைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் மலைவாழ் குடியிருப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story