வருவாய்த்துறை அலுவலகம் முன் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலகம் முன் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டம்
வனத்தில் மேய்ச்சலுக்கு தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டதால், மாவட்டம் வாரியாக வருவாய்த்துறை அலுவலகம் முன் கால்நடைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கால்நடைகள் மேய்க்க தடை
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நேற்று திருப்பூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் பெருமாள், செயலாளர் கண்ணன், துணைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் முன்னணி செயல்வீரர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு வந்த அனைவரையும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு
ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடந்த மார்ச் மாதம் 4 ந் தேதி, தேனி மாவட்டத்தில் மலைமாடுகள் மலைகளில் மேய்ப்பது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முழுவதும் வனப்பகுதியில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையொட்டி, தீர்ப்பில் மாற்றம் செய்வதாக நீதிபதிகள் அறிவித்தனர். கடந்த 17 ந் தேதி திருத்தப்பட்ட தீர்ப்பில், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களில் கால்நடைகள் மேய்க்க தடை விதித்தும், மற்ற வனப்பகுதியில் விதிகளுக்கு உட்பட்டு அரசு அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
மேல்முறையீடு செய்ய வேண்டும்
இதனால் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட புலிகள் சரணாலயம், யானை சரணாலய பகுதிகளுக்குள் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் வனத்தை சார்ந்து வசிக்கும் மற்ற சமூகத்தினர் கால்நடைகள் மேய்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
மக்களுக்கு வன உரிமை சட்டம் வழங்கிய உரிமைகளை மறுக்கும் வகையில் தீர்ப்பு உள்ளது. தமிழக அரசு மக்களின் வன உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும்.
கண்டன ஆர்ப்பாட்டம்
தீர்ப்பால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளவும், தீர்ப்புக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் வருவாய்த்துறை அலுவலகம் முன் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அடுத்த மாதம் 28-ந் தேதி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story