சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 25 March 2022 7:05 PM IST (Updated: 25 March 2022 7:05 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

விழுப்புரம், 

விழுப்புரம் நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஷேர் ஆட்டோ டிரைவர்கள், விதிமுறைகளை மீறி ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்ததையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் ஷேர் ஆட்டோக்கள் இயக்குவதை ஒழுங்குபடுத்தும் வகையிலும் குறிப்பிட்ட நிறுத்தங்களான ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பழைய பஸ் நிலையம், காந்தி சிலை, உழவர் சந்தை ஆகிய இடங்களில் மட்டுமே ஷேர் ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்ல வேண்டுமென போக்குவரத்து போலீசார் ஏற்கனவே அறிவித்து அதனை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இருந்தபோதிலும் நகரில் இன்னும் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை. இதற்கு காரணம் சாலையோரங்களில் ஆக்கிரமிப்பு கடைகள் இருப்பதாலும், அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் இன்று முதல்கட்டமாக விழுப்புரம் நேருஜி சாலை, எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த், ஏட்டுகள் பெருமாள், சண்முகம், போலீசார் மாதவன், வெண்ணிலா ஆகியோர் அதிரடியாக அகற்றினர்.
மேற்கண்ட சாலையோரங்களில் இருந்த பழக்கடை, பூக்கடை, தள்ளுவண்டி கடை மற்றும் அங்குள்ள கடைகளில் இருக்கும் விளம்பர பலகைகள், மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை போலீசார் அகற்றினர். மேலும் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு பாதை விட்டு கடை வைத்துக்கொள்ளும்படியும், அதையும் மீறி சாலையோரங்களை ஆக்கிரமிப்பு செய்து கடை வைத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

Next Story