நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் ‘சஸ்பெண்டு’


நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் ‘சஸ்பெண்டு’
x
தினத்தந்தி 25 March 2022 7:11 PM IST (Updated: 25 March 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

நிலுவைத்தொகை வழங்காத சர்க்கரை ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டும் அலுவலர்கள் ‘சஸ்பெண்டு’ செய்யப்படுவார்கள் என்றும் விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகையை வழங்காமல் பல மாதங்களாக பாக்கி வைத்துள்ளனர். அந்த நிலுவைத்தொகையை உடனே பெற்றுத்தர ஏற்பாடு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை எந்த ஜாமீனும் இல்லாமல் கடனுதவி வழங்க வேண்டும். 

ஏரி ஆக்கிரமிப்பு

ஏரிகளில் மீன் குத்தகை எடுத்து மீன் வளர்ப்பவர்கள், பாசனத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை திறந்து விடுகின்றனர். இனி வரும்காலம் கோடை காலம் என்பதால் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே ஏரி தண்ணீரை திறந்து விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஏரி ஆக்கிரமிப்புகள் முழுவதையும் விரைந்து அகற்ற வேண்டும்.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு உள்ளது. இதில் அதிகாரிகள் தலையிட்டு கட்டுப்படுத்த வேண்டும். இன்னும் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்தால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

தரமற்ற மணிலா விதை

வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் மணிலா விதையின் முளைப்புத்திறன் மிகவும் குறைவாக உள்ளது. தரமற்ற விதைகளை தயவு செய்து விவசாயிகளுக்கு வழங்காதீர்கள். 
செஞ்சி பகுதியில் மும்முனை மின்சாரம் எப்போது வருகிறது, எத்தனை மணிக்கு வழங்கப்படுகிறது என்பதே தெரியவில்லை. அதை முறைப்படுத்தி வினியோகிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சர்க்கரை ஆலைகளை மூட நடவடிக்கை 

இதற்கு பதிலளித்து மாவட்ட கலெக்டர் மோகன் பேசுகையில், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டும். அவ்வாறு நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்பவர்கள் தாங்களாக முன்வந்து தற்போது செய்துள்ள இந்த சாகுபடியோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு, தலைமை செயலாளர் வரை இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். 

அலட்சியம் வேண்டாம் 

எனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் கடும் நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் உறுதியாக உள்ளது. எனவே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கருணை இல்லாமல் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பு அகற்றுவதில் அலட்சியம் காட்டினாலோ, பாரபட்சமாக நடந்துகொண்டாலோ தாசில்தார்கள் முதல் கிராம நிர்வாக அலுவலர்கள் வரை சஸ்பெண்டு செய்யப்படுவார்கள்.
பிரதம மந்திரியின் நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவித்தொகை பெற வங்கி கணக்கு எண்ணுடன் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த மற்ற கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story