கோடை வந்தாச்சு கூடவே குடிநீர் தட்டுப்பாடும் வந்தாச்சு
கோடை வந்தாச்சு கூடவே குடிநீர் தட்டுப்பாடும் வந்தாச்சு
கோவை
கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 5 லட்சம் வீடுகள் உள்ளதோடு ஏராளமான பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், மால்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளன. மாநகரில் சுமார் 18 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக சிறுவாணி, பில்லூர் குடிநீர் திட்டம் 1 மற்றும் 2, ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதில் சிறுவாணி அணை நீரை நம்பி சுமார் 36 வார்டுகள் உள்ளன. கோவை மாநகருக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிறுவாணி அணை முக்கிய இடம் வகிக்கிறது. இந்த அணையில் திருந்து தினமும் 9 கோடி லிட்டர் வரை குடிநீர் எடுத்து வினியோகம் செய்ய முடியும். 49.5 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 அடி அளவிற்கு மட்டுமே குடிநீர் தேக்கி வைக்க கேரள அரசு அனுமதிக்கிறது.
இதனிடையே கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சிறுவாணி அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரை கேரள அதிகாரிகள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி திறந்து விட்டனர். இதனால் அணையில் இருந்து பெருமளவு தண்ணீர் வெளியேறியது.
சிறுவாணி அணையில் தற்போது 23 அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை தான் அடுத்து வரும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டியது உள்ளது. எனவே சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 9 கோடி லிட்டரில் இருந்து 4.5 கோடி லிட்டராக குறைந்து விட்டது. இதனை ஈடு செய்ய சிறுவாணி அணை நீர் வினியோகம் செய்ய வேண்டிய இடங்களுக்கு பில்லூர் அணை நீர் வினியோகம் செய்ய வேண்டியது உள்ளது.
கோவை மாநகரின் தினசரி குடிநீர் தேவை 24 கோடி லிட்டராக உள்ளது. ஆனால் தற்போது 17 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே வினியோகம் செய்ய முடிகிறது. இதன்காரணமாக முன்பு வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு தற்போது 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கோடை வந்தாச்சு... கூடவே குடிநீர் தட்டுப்பாடும் வந்தாச்சு என்கிற நிலை உள்ளது. இதன்காரணமாக மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பல இ்டங்களில் பொதுமக்கள் காலிக்குடங்கள் காத்துக்கிடக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை மாநகருக்கு தினசரி சிறுவாணி அணையில் இருந்து 9 கோடி லிட்டரும், பில்லூர் குடிநீர் திட்டம் 1-ல் 3 கோடி லிட்டரும், திட்டம் 2-ல் 12 கோடி லிட்டரும் கோவைக்கு குடிநீர் கிடைக்கிறது. இதுதவிர வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம், ஆழியாறு கூட்டு குடிநீர் திட்டம் என அனைத்து குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு 25 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்வதற்கு தேவையான வசதிகள் உள்ளன.
ஆனால் கேரள அரசு அதிகாரிகள் சிறுவாணி அணையை திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் 23 அடியாக குறைந்து விட்டது. இதன்காரணமாக அணையில் இருந்து கோவை மாநகர் குடிநீர் தேவைக்கு 4.5 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே எடுக்க முடிகிறது. எனவே இந்த அணை குடிநீர் வினியோகம் செய்ய முடியாத இடங்களுக்கு பில்லூர் அணை நீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வாரத்தில் பில்லூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி, பல்லடம் செல்லும் வழியில் குடிநீர் குழாயில் உடைப்பு, பராமரிப்பு பணி உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் 5 நாட்களுக்கு பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை உள்ளது.
தற்போது அனைத்து பழுதுகளும் சரி செய்யப்பட்டு விட்டது. இருப்பினும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட பகுதிகளுக்கு பிற அணை நீராதாரங்களில் இருந்து குடிநீர் திருப்பி விடப்பட்டது. எனவே மாநகரில் மீண்டும் குடிநீர் சீராக இன்னும் 2 வாரங்கள் பிடிக்கும்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மே மாதம் இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கும். இதனால் சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் நல்ல மழை கிடைக்கும் என்பதால், அணையின் நீர் மட்டம் உயர்ந்து விடும். எனவே கோவையில் மிகப்பெரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story