கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தால் நடவடிக்கை; தனியார் பள்ளிகளுக்கு மந்திரி பி.சி.நாகேஸ் எச்சரிக்கை
கர்நாடகத்தில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளுக்கு மந்திரி பி.சி.நாகேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெங்களூரு:
நடவடிக்கை
கர்நாடக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் கர்நாடகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்தகூட்டத்தொடரின் 16-வது நாள் கூட்டம் இன்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்திற்குஅனுமதி அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரம் எடுத்து கொள்ளப்பட்டது.
இதில் ஜனதா தளம் (எஸ்) உறுப்பினர் மஞ்சுநாத், கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்றும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பதிலளிக்கையில் கூறியதாவது:-
கண்காணிப்பு
கர்நாடகத்தில் தனியார் பள்ளிகள், கல்வி கட்டணம் செலுத்தாத குழந்தைகளை தேர்வு எழுத அனுமதி மறுக்கக்கூடாது. அவ்வாறு ஏதாவது மாணவர்களை தேர்வு எழுத அனுமதி மறுத்தால் அத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். எந்த மாணவருக்கும் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்காமல் இருக்கக்கூடாது.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story