நாகர்கோவிலில் மினி மாரத்தான்
நாகர்கோவிலில் 75 -வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மினி மாரத்தான் நடந்தது. இதை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 75 -வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மினி மாரத்தான் நடந்தது. இதை கலெக்டர் அரவிந்த் தொடங்கி வைத்தார்.
மினி மாரத்தான்
75-வது சுதந்திர தினத்தையொட்டி குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 7 நாள் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நாகர்கோவிலில் நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து மினி மாரத்தான் தொடங்கியது. இதனை கலெக்டர் அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் ஆணைக்கிணங்க 75 - வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (அதாவது நேற்று) மாவட்டத்திற்கு உட்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் நடைபெற்றது.
படகுப்போட்டி
நாளை (அதாவது இன்று) காலை 8 மணிக்கு குளச்சல் கடற்கரையில் மணல் சிற்ப போட்டியும், 27-ந் தேதி காலை 6.45 மணிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொள்ளும் மாபெரும் சைக்கிள் பேரணி நிகழ்ச்சியும், அன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரியில் மாபெரும் படகுப்போட்டியும் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மாரத்தான் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, வடசேரி பஸ் நிலையம், அண்ணா விளையாட்டு அரங்கம், வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களும், மாரத்தானில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
கலந்துகொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி புகழேந்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜாண் ஜெகத் பிரைட், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அதிகாரி டேவிட் டேனியல், சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி, அருட்பணியாளர் நெல்சன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் சுரேஷ், உடற்பயிற்சி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story